மக்கள் தொகைக்கு ஏற்ப கொரோனா தடுப்பூசி வழங்க வேண்டும்

ஊராட்சிகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப கொரோனா தடுப்பூசி அதிகளவில் வழங்க வேண்டும் என்று திருப்பூர் ஒன்றிய ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

Update: 2021-06-07 16:02 GMT
திருப்பூர்
ஊராட்சிகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப கொரோனா தடுப்பூசி அதிகளவில் வழங்க வேண்டும் என்று திருப்பூர் ஒன்றிய ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
கொரோனா தடுப்பூசி இல்லை
திருப்பூர் ஒன்றிய ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் கணேசன், செயலாளர் சண்முகசுந்தரம், பொருளாளர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். 
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் ஒன்றியத்தில் உள்ள 13 ஊராட்சிகளுக்கும் பெருமாநல்லூரில் உள்ள மேம்படுத்தப்பட்ட வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து கொரோனா தடுப்பூசிகள் மிக மிகக் குறைவாகவே வழங்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடுவதற்கான பிரசாரங்களை உள்ளாட்சி அமைப்புகள் செய்ததன் காரணமாக ஊராட்சிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும், அம்மா மினி கிளினிக்கிற்கும் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு பொதுமக்கள் அதிக அளவில் வருகிறார்கள். ஆனால் தடுப்பூசி இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கிறார்கள்.
வித்தியாசம்
அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் பொதுமக்கள் போனிலும், நேரிலும் தடுப்பூசிகளை விரைவில் அனைவருக்கும் போடுவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்று கேட்டு வருகிறார்கள். ஆனால் இதுவரை வழங்கப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கைக்கும் ஊராட்சியின் மக்கள் தொகைக்கும் பெரும் வித்தியாசம் உள்ளது.
ஊராட்சியின் மொத்த மக்கள் தொகையில் ஒன்று அல்லது இரண்டு சதவிகிதம் அளவுக்குத்தான் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
மக்கள் தொகை
பெருமாநல்லூரில் உள்ள மேம்படுத்தப்பட்ட வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை எவ்வளவு, எந்த அடிப்படையில் ஊராட்சிகளுக்கு பிரித்து வழங்கப்படுகிறது என்ற தகவல் எங்களுக்கு தெரியவில்லை. எந்த தேதியில் தடுப்பூசிகள் போடப்படுகின்றன என்ற தகவலும் முன்கூட்டியே தெரிவிப்பதில்லை.
பெருமாநல்லூர் ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோதும் சரியான பதில் இல்லை. தொற்று எண்ணிக்கை அதிகம் உள்ள பகுதிகளுக்கு தடுப்பூசிகள் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படவில்லை. எனவே உடனடியாக இந்த பிரச்சினையில் தலையிட்டு ஊராட்சிகளின் மக்கள் தொகைக்கு ஏற்ப தடுப்பூசிகளை அதிகளவில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்