பலத்த மழையால் பழனி வரதமாநதி அணை நிரம்பியது; விவசாயிகள் மகிழ்ச்சி

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையால் பழனி வரதமாநதி அணை நேற்று நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2021-06-07 14:59 GMT
பழனி:
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையால் பழனி வரதமாநதி அணை நேற்று நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
நீர்வரத்து அதிகரிப்பு
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே வரதமாநதி, பாலாறு-பொருந்தலாறு, குதிரையாறு ஆகிய 3 அணைகள் உள்ளன. இந்த அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதியாக கொடைக்கானல் மலைப்பகுதி உள்ளது. 
கடந்த சில நாட்களாக கொடைக்கானல் மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பழனி பகுதியில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. அதேபோல் அணைகளின் நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்தது. 
66 அடி உயரம் கொண்ட வரதமாநதி அணைக்கு கடந்த சில நாட்களாகவே நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் அந்த அணை நிரம்பும் தருவாயில் இருந்தது. 
நிரம்பி வழிகிறது
இந்தநிலையில் நேற்று மாலை வரதமாநதி அணை நிரம்பியது. இதைத்தொடர்ந்து அணையில் இருந்து மறுகால் வழியே உபரிநீர் வெளியேறி வருகிறது. அவ்வாறு அணை நிரம்பி, மறுகால் வழியாக தண்ணீர் வழிவது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. 
தற்போது அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 92 கன அடியாக உள்ளது. அவ்வாறு வரத்தாகும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. வரதமாநதி அணை நிரம்பியதால் அதன் மூலம் பாசன வசதி பெறும் ஆயக்குடி பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 5 ஆண்டுகளுக்கு பிறகு கோடை காலத்தில் வரதமாநதி அணை நிரம்பியதாக விவசாயிகள் தெரிவித்தனர். 
குதிரையாறு அணை
இதேபோல் 65 அடி உயரம் கொண்ட பாலாறு-பொருந்தலாறு அணையின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 46 அடியாக இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு 386 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 29 கன அடி தண்ணீர் பாசனத்திற்காக திறக்கப்பட்டு வருகிறது. 
80 அடி உயரம் கொண்ட குதிரையாறு அணையின் நீர்மட்டம் 56 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் வினாடிக்கு 20 கன அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்