மற்ற சமூகத்துக்கு பாதிப்பு ஏற்படாமல் மராத்தா இடஒதுக்கீடு வழங்கப்படும்: மராட்டிய துணை முதல்-மந்திரி அஜித்பவார் உறுதி
சத்ரபதி சிவாஜி மன்னராக முடிசூட்டி கொண்ட தினம் நேற்று புனே கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் துணை முதல்-மந்திரி அஜித்பவார் கலந்த கொண்டார்.
அப்போது மராத்தா இடஒதுக்கீடு குறித்து அவர் கூறியதாவது:-
சுப்ரீம் கோர்ட்டால் ரத்து செய்யப்பட்டுள்ள மராத்தா இடஒதுக்கீடை வழங்க முதல்-மந்திரி உத்தவ்தாக்கரேவின் தலைமையில் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். மராத்தா இடஒதுக்கீடின் அடிப்படையான எம்.பி. கெய்க்வாட் கமிஷனின் அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பி இருந்தது. ஆனால் சிலர் அந்த சமூக மக்களின் உணர்வுகளை தூண்ட முயற்சி செய்கின்றனர்.
இந்த நேரத்தில் மகாவிகாஸ் அரசு மற்ற சமூகத்துக்கு பாதிப்பு ஏற்படாமல், மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கும் என உறுதி அளிக்கிறேன். ஏற்கனவே இடஒதுக்கீடு தொடர்பாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் பிரதிநிதிகள் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து பேசினர். இவ்வாறு அவர் கூறினார். அஜித்பவாருடன் சேர்ந்து ஆட்சி அமைத்தது தவறு என தேவேந்திர பட்னாவிஸ் கூறியது பற்றி கேட்ட போது, அது நடந்து 14 மாதங்கள் ஆகிவிட்டது, தற்போது அதை கடந்துவந்துவிட்டோம் என்றார்.