கிடங்குக்கு செல்ல முடியாமல் நெல்மூட்டைகளுடன் சாலையோரத்தில் நிறுத்தப்பட்ட லாரிகள்
சேறும், சகதியுமான பாதையால் மொத்த இருப்பு கிடங்குக்கு செல்ல முடியாமல் நெல்மூட்டைகளுடன் சாலையோரங்களில் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
கீழப்பழுவூர்,
அரியலூர் மாவட்டத்தில் திருமானூர், தா.பழூர் பகுதிகளில் 15-க்கும் மேற்பட்ட நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் அரவைக்காக திருமானூர் ஒன்றியம் அயன்சுத்தமல்லி கிராமத்தில் உள்ள தமிழ்நாடு வாணிப கழக கிடங்குக்கு எடுத்துச் செல்லப்படும்.
மேலும் இருப்பு வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் அயன் சுத்தமல்லியில் உள்ள மொத்த இருப்பு கிடங்கிற்கு எடுத்துச்செல்ல லாரிகளில் ஏற்றப்பட்டு கீழப்பழுவூர் அருகில் உள்ள மின்னணு எடை மையத்தில் எடை பார்க்கப்பட்டு எடுத்துச்செல்லப்படுவது வழக்கம். ஆனால் கடந்த நான்கு நாட்களாக நெல் மூட்டைகளை ஏற்றி வரும் லாரிகள் எடை பார்க்கப்பட்ட பின் மொத்த இருப்பு கிடங்கிற்கு செல்லாமல் சாலையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதில் சுமார் 20-க்கும் மேற்பட்ட லாரிகள் சாலையின் ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து லாரி டிரைவர்கள் கூறுகையில், மொத்த நெல் மூட்டைகள் இருப்பு கிடங்கிற்கு செல்வதற்கான பாதை சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் லாரிகள் சேற்றில் சிக்கிக் கொள்ளக்கூடிய சூழ்நிலை உள்ளது. எனவேதான் தற்போது சாலையின் ஓரத்தில் லாரிகளை நிறுத்தி வைத்துள்ளோம். இரண்டு, மூன்று நாட்களாக இவ்வாறு சாலையின் ஓரத்திலேயே லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் எங்களுக்கு உணவு கூட கிடைக்கவில்லை. மேலும் டிரைவர்களுக்கான தின படியோ அல்லது வேறு வருமானமும் இல்லாமல் தவித்து வருகிறோம்.
மேலும் மொத்த நெல் இருப்பு கிடங்கிற்கு லாரிகளை எடுத்துச் செல்லும்போது லாரிகள் சேற்றில் சிக்கிக் கொண்டால் லாரிகளை மீட்பதற்கு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. மாறாக எங்களது சொந்த பணத்தை கொண்டு தான் லாரிகளை வெளியில் எடுக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் கொள்முதல் நிலையத்திற்கு செல்லக்கூடிய லாரிகளின் டிரைவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து கிடங்கிற்கு செல்வதற்கான பாதையை மழைக்காலங்களில் நீர் தேங்காத வகையில் தார் சாலையாக மாற்றித்தர வேண்டும், என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளில், இந்த வருடத்திற்கான நெல் மூட்டைகள் மட்டுமே தார்ப்பாய்கள் போட்டு மூடி பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. கடந்த வருடம் விவசாயிகளிடம் இருந்து வாங்கப்பட்ட நெல் மூட்டைகள் பொதுவெளியில் தார்ப்பாய்கள் கொண்டு மூடாமல் வெயில் மற்றும் மழையில் நனைந்து மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனை பார்க்க வேதனை அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
நெல் அரவைக்கு கொண்டு செல்லப்படும்போது புதிய நெல் மற்றும் பழைய நெல் என இரண்டையும் கலந்து அனுப்புகின்றனர். இத்தகைய அத்தியாவசிய உணவு பொருளை பராமரிப்பின்றி வைத்திருக்கலாமா? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே அரசு இதனை கவனத்தில் கொண்டு நெல் மூட்டைகளை சரியாக பராமரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.