விதிமுறைகளை மீறியதாக பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு பூட்டு
ஆண்டிமடம் பகுதியில் விதிமுறைகளை மீறியதாக பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு அதிகாரிகள் பூட்டு போட்டு பூட்டினர்.
ஆண்டிமடம்,
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியில் விதிமுறைகளை மீறி பலர் வாகனங்களில் சுற்றித்திரிவதால் அவர்கள் வெளியே வருவதை தடுக்க வருவாய்த்துறை, காவல்துறை, சுகாதாரத்துறையை சேர்ந்த அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இருப்பினும் வாகனங்களில் சுற்றித்திரிபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில், போலீசார் வாகனங்களை பறிமுதல் செய்தும், வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தும் வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து வாகன போக்குவரத்தை கட்டப்படுத்த, நேற்று முன்தினம் வட்ட வழங்கல் அலுவலர் காமராஜ் தலைமையிலான கண்காணிப்பு குழுவினர் பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர்களிடம் நேரில் சென்று அத்தியாவசிய காரணங்களுக்கு மட்டுமே வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் விற்பனை செய்யப்பட வேண்டும். உள்ளூர் நபர்கள் அனுமதிக்கப்பட்ட அத்தியாவசிய பணிகளுக்கு சென்றுவர நாளொன்றுக்கு ஒரு லிட்டர் மட்டுமே பெட்ரோல் விற்பனை செய்யப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று ஆண்டிமடம் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வட்ட வழங்கல் அலுவலர் காமராஜ் தலைமையிலான கண்காணிப்புக் குழுவினர், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் உமாபதி ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு ஊழியர், ஒருவருக்கு 20 லிட்டர் கேனில் பெட்ரோல் வினியோகித்துக் கொண்டு இருந்தார். இதுகுறித்து பெட்ரோல் வாங்க வந்தவரிடம் விசாரித்தபோது, அவர் விற்பனைக்காக வாங்கி செல்வதாக கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர்கள் விதிமுறைகளை மீறி பெட்ரோல் விற்பனை செய்ததால் பெட்ரோல் விற்பனை நிலையத்தை ஆண்டிமடம் வட்ட வழங்கல் அலுவலர் பூட்டு போட்டு பூட்டி, சாவியை உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அமர்நாத்திடம் ஒப்படைத்தார். இதையடுத்து அந்த பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தற்காலிகமாக விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது, என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.