கொரோனா பரவலால் ஊரடங்கு: கோடை விடுமுறையில் 2 மாதங்களில் ரூ.2½ லட்சம் பொதுப்பணித்துறைக்கு இழப்பு
கொரோனா பரவல் ஊரடங்கால் கோடை விடுமுறையில் மேட்டூர் பூங்கா வெறிச்சோடியது. இதனால் 2 மாதங்களில் 2½ லட்சம் ரூபாய் வருவாயை பொதுப்பணித்துறை இழந்தது.
மேட்டூர்:
கொரோனா பரவல் ஊரடங்கால் கோடை விடுமுறையில் மேட்டூர் பூங்கா வெறிச்சோடியது. இதனால் 2 மாதங்களில் 2½ லட்சம் ரூபாய் வருவாயை பொதுப்பணித்துறை இழந்தது.
மேட்டூர் பூங்கா
மேட்டூர் அணையை ஒட்டி அமைந்துள்ள பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்வார்கள். குறிப்பாக விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் வருகை மேட்டூர் பூங்காவில் அதிக அளவில் காணப்படும்.
அதுமட்டும் அல்லாமல் கோடை விடுமுறை மாதங்களான ஏப்ரல், மே மாதங்களில் நாள்தோறும் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும்.
வெறிச்சோடியது
இந்த நிலையில் கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் கொரோனா பரவல் அதிகரித்தது. பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதனால் தமிழகம் முழுவதும் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன. ஏப்ரல் முதல் வாரத்திலேயே மேட்டூர் பூங்காவும் மூடப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் இல்லாமல் பூங்கா வெறிச்சோடியது.
வருவாய் இழப்பு
இதனால் பொதுப்பணி துறையினருக்கு பூங்கா நுழைவு கட்டணம் மூலம் கிடைக்கும் வருவாய் முற்றிலும் இல்லாமல் போனது. அந்த வகையில் கடந்த 2 மாதங்களில் மட்டும் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் வரை பொதுப்பணி துறையினருக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.
அதுமட்டும் இல்லாமல் பூங்கா அருகே ஏராளமான மீன் வறுவல் கடைகள் மற்றும் சிறிய ஓட்டல்கள் சுற்றுலா பயணிகளை நம்பியே செயல்பட்டு வந்தன. பூங்கா மூடப்பட்டதால் மீன் வியாபாரம் மற்றும் சிறிய ஓட்டல்கள் வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகளும் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.