தொற்று பாதிப்பில் ஈரோடு மாவட்டம் 2-ம் இடம்: இளம்பெண் உள்பட 10 பேர் கொரோனாவுக்கு பலி
தொற்று பாதிப்பில் ஈரோடு மாவட்டம் 2-ம் இடத்தை பிடித்தது. மேலும் இளம்பெண் உள்பட 10 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள்.
ஈரோடு
தொற்று பாதிப்பில் ஈரோடு மாவட்டம் 2-ம் இடத்தை பிடித்தது. மேலும் இளம்பெண் உள்பட 10 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள்.
தொற்று பாதிப்பில் 2-ம் இடம்
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரசின் 2-வது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இந்த நிலையில் நேற்று சுகாதார துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலின்படி கோவை மாவட்டம் முதல் இடம் பிடித்துள்ளது. அங்கு 2 ஆயிரத்து 645 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அதற்கு அடுத்தபடியாக ஈரோடு மாவட்டம் 2-வது இடத்தில் உள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் 1,694 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக சென்னையை விட ஈரோடு மாவட்டத்தில் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஈரோடு மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 66 ஆயிரத்து 274 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
10 பேர் பலி
இதற்கிடையில், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 26 வயது இளம்பெண்ணுக்கு பரிசோதனை செய்தபோது அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர் கடந்த 4-ந்தேதி மதியம் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அன்று மாலை சிகிச்சை பலனின்றி இளம்பெண் பரிதாபமாக இறந்தார்.
மேலும் கொரோனாவுக்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 68 வயது மூதாட்டி கடந்த மாதம் 26-ந் தேதியும், 44 வயது ஆண், 60 வயது மூதாட்டி, 55 வயது ஆண், 36 வயது ஆண், 45 வயது பெண் ஆகியோர் கடந்த 4-ந்தேதியும், 65 வயது மூதாட்டி, 61 வயது முதியவர் ஆகியோர் நேற்று முன்தினமும், 63 வயது முதியவர் நேற்றும் இறந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 435 ஆக உயர்ந்தது.
2,078 பேர் குணமடைந்தனர்
அதேநேரம் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 2 ஆயிரத்து 78 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
இதுவரை மொத்தம் 50 ஆயிரத்து 347 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர்.
தற்போது மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று உள்ள 15 ஆயிரத்து 492 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.