அரசு ஆஸ்பத்திரிகள் தரம் உயர்த்தப்படும்

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், அரசு ஆஸ்பத்திரிகள் தரம் உயர்த்தப்படும் என்று உறுதி அளித்தார்.

Update: 2021-06-06 18:16 GMT
கூடலூர்,

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், அரசு ஆஸ்பத்திரிகள் தரம் உயர்த்தப்படும் என்று உறுதி அளித்தார்.

அமைச்சர் ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வந்தார். அவர் ஊட்டியில் உள்ள எச்.பி.எப். பகுதியில் ரூ.447.32 கோடி மதிப்பிலான அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

பின்னர் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க பொதுப்பணித்துறை அலுவலர்களை அறிவுறுத்தினர். மேலும் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அமைக்கப்பட்ட ஜீரோ டிலே வார்டு, 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் டேங்க் ஆகியவற்றின் செயல்பாட்டை பார்வையிட்டார்.

நலத்திட்ட உதவிகள்

பின்னர் மசினகுடி, கூடலூர் பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். செம்மநத்தம் ஆதிவாசி கிராமத்தில் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். 

தொடர்ந்து ஆதிவாசி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் தன்னார்வ அமைப்புகள் சார்பில் வழங்கப்பட்ட தடுப்பூசி வாகனம், ஆக்சிஜன் செறிவூட்டிகள் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-

ஆக்சிஜன் வசதி

நீலகிரி மாவட்டத்தில் 27 ஆயிரத்து 32 பழங்குடியினர் உள்ளனர். இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 21 ஆயிரத்து 435 பேர் உள்ளனர். இதுவரை 3 ஆயிரத்து 129 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இந்தியாவிலேயே நீலகிரி மாவட்டத்தில்தான் ஆதிவாசி மக்கள் அனைவருக்கும் 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டது என்ற பெருமையை அடைய வேண்டும். குறிப்பாக செம்மநத்தம் கிராமத்தில், அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்ட கிராமம் என்ற நிலையை எட்ட வேண்டும்.

தமிழகத்தில் 142 இடங்களில் ஆக்சிஜன் வசதி ஏற்படுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி நீலகிரி, விருதுநகர், அரியலூர் மாவட்டத்தில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் தொடங்க கட்டமைப்பு உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு 2 முறை தேவைக்கேற்ப ஆக்சிஜன் உற்பத்தி செய்து, வழங்கப்பட்டு இருக்கிறது.

ஒத்துழைப்பு

சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு இணையாக ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனைத்து மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் கூடலூர் மற்றும் பிற அரசு ஆஸ்பத்திரிகளின் தரமும் உயர்த்தப்படும். கொரோனா தடுப்பில் முதன்மையாகவும், தொற்று இல்லாத மாவட்டமாகவும் நீலகிரி மாற வேண்டும். இதற்கு அதிகாரிகள், பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூடலூர் 1-ம் மைல் கோகோ காடு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை அமைச்சர் பார்வையிட்டார். மேலும் செம்பாலா தனியார் தேயிலை தொழிற்சாலை வளாகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்.

அப்போது வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், மக்கள் நல்வாழ்வு துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன், நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனர் செல்வவிநாயகம், மருத்துவக் கல்லூரி டீன் மனோகரி, கணேஷ் எம்.எல்.ஏ. மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்