கரூர் தெற்கு காந்திகிராமத்தில் பராமரிப்பின்றி கிடக்கும் பூங்கா சீர் செய்யப்படுமா?
கரூர் தெற்கு காந்திகிராமத்தில் பராமரிப்பின்றி கிடக்கும் பூங்கா சீர் செய்யப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
கரூர்
பூங்கா
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கரூர் நகராட்சி, தாந்தோணி நகராட்சி, இணாம் கரூர் நகராட்சி என்று 3 நகராட்சியாக இருந்த போது தாந்தோணி நகராட்சி பகுதிக்கு உட்பட்ட தெற்கு காந்திகிராமத்தில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியாக இருந்தது. இதனால் அப்போதைய தாந்தோணி நகர் மன்ற தலைவர் ரேவதி, குழந்தைகள் விளையாடி மகிழவும், பெரியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ளவும் விளையாட்டு மைதானத்துடன் கூடிய பூங்காவை அமைத்தார்.
இதில், குழந்தைகள் விளையாடி மகிழ சறுக்கு, ஊஞ்சல் மற்றும் நீரூற்று உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களுடன் கூடி பூங்கா அமைக்கப்பட்டது. அதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விளையாடி பொழுதை கழித்து வந்தனர்.
கோரிக்கை
பின்னர் 3 நகராட்சிகளையும் ஒன்றிணைத்து கரூர் பெருநகராட்சியாக அறிவிக்கப்பட்டது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக பூங்கா போதிய பராமரிப்பு இல்லாமல் போனது. இதனால் விளையாட்டு உபகரணங்கள் உடைந்தும், நீரூற்றுகள் சிதைந்தும் உள்ளன. இதனால் சிறுவர்கள் விளையாட முடியாத நிலை உள்ளது. எனவே இந்த பூங்காவை உடனடியாக சீர் செய்யபட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுமா? என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.