வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஊரடங்கை மீறிய 80 பேருக்கு கொரோனா பரிசோதனை
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஊரடங்கை மீறிய 80 பேருக்கு கொரோனா பரிசோதனை
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் தளர்வுகள் இல்லாத முழுஊரடங்கை அமல்படுத்தும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். தமிழக-ஆந்திர மாநில எல்லைகள், மாவட்ட எல்லைகள் உள்பட மொத்தம் 55 இடங்களில் போலீசார் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனாலும் பலர் ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றித்திரிகிறார்கள்.
இதனை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கை மீறி சுற்றும் நபர்களுக்கு போலீசார் அபராதம் விதிக்கிறார்கள். பின்னர் அந்த பகுதியில் நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாமில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி நேற்று வேலூர் கலெக்டர் அலுவலக மேம்பாலம் அருகே சத்துவாச்சாரி போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கை மீறி சுற்றித்திரிந்த 80-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் அப்பகுதியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அங்கு மாநகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்து சுகாதார பணியில் ஈடுபட்டனர்.