தர்மபுரி அரசு மருத்துவமனையில் டாக்டர்-நர்சுகளின் நகை, பணம் திருட்டு-மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
தர்மபுரி அரசு மருத்துவமனையில் டாக்டர் மற்றும் நர்சுகளின் நகை, பணம் திருட்டு போனது தொடர்பாக மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தர்மபுரி:
நகை-பணம் திருட்டு
தர்மபுரி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் டாக்டர்கள் மற்றும் நர்சுகளின் நகை, பணம், செல்போன் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போவதாக புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக ஆபரேஷன் தியேட்டர்களுக்கு செல்லும் டாக்டர்களின் உடைமைகள் அடிக்கடி திருட்டு போவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் உள்ள மகப்பேறு வார்டில் பெண் டாக்டர் ஒருவர் அறுவை சிகிச்சை செய்ய வந்தபோது அங்குள்ள ஓய்வறையில் 1½ பவுன் வளையல் மற்றும் ரூ.4 ஆயிரம் ஆகியவற்றை வைத்துவிட்டு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது வளையல் மற்றும் பணம் திருட்டு போனதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
போலீசார் விசாரணை
இதுதொடர்பாக அவர் மருத்துவமனை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார். மேலும் அங்கு பாதுகாப்பு பணியில் உள்ள போலீசாரிடம் அவர் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். இதேபோன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசவ வார்டில் பணி புரிந்துவரும் 2 நர்சுகளின் 3 பவுன் நகை மற்றும் பணம் ஆகியவை திருட்டு போனது. இது தொடர்பாக நர்சுகள் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி அரசு மருத்துவமனையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவுகளை ஆராய்ந்து நகை திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.