விழுப்புரம் மாவட்ட கிராமங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு கட்டுப்படுத்த அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு
விழுப்புரம் மாவட்ட கிராமங்களில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம்,
ஆலோசனை கூட்டம்
விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நோய்த்தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று காலை 6 மணிக்கு விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமை தாங்கி கலெக்டர் அண்ணாதுரை, கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காஞ்சனா மற்றும் வருவாய்த்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தொற்று இல்லாத நிலையை...
கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு பேசியதாவது:-
கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும்.
விழுப்புரம் மாவட்டத்தில் நகரங்களை விட கிராமங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து காணப்படுகிறது. எனவே தீவிர களப்பணியாற்றி நகர்புறம் மற்றும் கிராமங்களில் கொரோனா தொற்றை முழுமையாக கட்டுப்படுத்தி, கொரோனா தொற்று இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக ஒரே தெருக்களில் 3 பேருக்கு மேல் தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் உடனடியாக அந்த தெருவை தனிமைப்படுத்த வேண்டும். மேலும் அந்த தெரு பகுதி மக்களுக்கு தேவையான காய்கறி, மளிகை, ரேஷன் பொருட்கள் மற்றும் மருத்துவ வசதி போன்ற அடிப்படை தேவைகளை அதிகாரிகள் செய்து கொடுப்பதோடு, அந்த பணிகளை கண்காணிக்க வேண்டும்.
கூட்டம் சேர விடக்கூடாது
அதுதவிர தனிமைப்படுத்தப்பட்ட பகுதி மக்கள் வெளியே செல்லாதவாறும், வெளியாட்கள் யாரும் தெருவுக்குள் செல்லாதவாறும் தடுப்புகள் அமைத்து காவல்துறை மூலம் கண்காணிக்க வேண்டும். மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தி காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளவும், தடுப்பூசி முகாம்களை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும். தற்போது தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே கடைகள் திறந்தால் பொதுமக்கள் கூட்டம் அதிகளவு சேராத வகையில் அதிகாரிகள் ஆய்வு செய்யவும், போலீசார் ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடித்து கடைகள் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.