திருச்சியில் கள்ளக்காதலை கண்டித்த கணவர் கொலை; மனைவி உள்பட 2 பேர் கைது

திருச்சியில் கள்ளக்காதலை கண்டித்த கணவரை கொன்ற மனைவி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-06-06 16:23 GMT
திருச்சி, 

திருச்சியில் கள்ளக்காதலை கண்டித்த கணவரை கொன்ற மனைவி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தையல் தொழிலாளி

திருச்சி தாராநல்லூர் பூக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் சேக்தாவூத் (வயது 35). தையல் தொழிலாளியான இவருக்கு காது கேட்காது, வாய் பேசவும் முடியாது. இவருடைய மனைவி ரகமத்பேகம் (30). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

அதே பகுதியைச் சேர்ந்தவர் ஷேக்தாவூத்தின் தங்கை கணவர் அப்துல் அஜீஸ் (35). இவர் வேன் டிரைவராக உள்ளார். இவருக்கும், ரகமத்பேகத்துக்கும் இடையே சில ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதுபற்றி அறிந்த சேக்தாவூத் மனைவியை கண்டித்துள்ளார்.

தலையணையால் அமுக்கி கொலை

இதனால் சேக்தாவூத் மீது இருவரும் ஆத்திரத்தில் இருந்துள்ளனர். நேற்று அதிகாலை ஷேக்தாவூத் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அப்துல்அஜீஸ், ரகமத்பேகத்துடன் சேர்ந்து ஷேக்தாவூத்தின் முகத்தில் தலையணையை வைத்து அமுக்கினர்.

வாய் பேச முடியாததால் அவரால் சத்தம் போட முடியவில்லை. சிறிது நேரத்தில் அவர் மூச்சு திணறி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து அறிந்த அக்கம் பக்கத்தினர் ஷேக்தாவூத் முகத்தில் லேசான காயம் இருந்ததை கண்டு காந்திமார்க்கெட் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

2 பேர் கைது

மேலும், சேக்தாவூத் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து காந்திமார்க்கெட் போலீசார் ரகமத்பேகத்திடம் நடத்திய விசாரணையில், கள்ளக்காதலை கண்டித்ததால் அப்துல்அஜீஸ் உடன் சேர்ந்து கணவனை கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரகமத்பேகம், அப்துல் அஜீஸ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவியே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்