தடுப்பூசி பற்றி தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை.கலெக்டர் எச்சரிக்கை
கொரோனா தடுப்பூசி பற்றி தவறான தகவல் பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் கூறினார்.
திருப்பத்தூர்
அதிக விலைக்கு விற்பனை?
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தி பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
சிறப்பு முகாம்களில் ஒரு பாட்டிலில் இருக்கும் மருந்தை 10 பேருக்கு போட அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் சிறப்பு முகாமில் ஒரு பாட்டிலில் இருக்கும் மருந்து 10 பேருக்கு பதில் 11 அல்லது 12 பேருக்கு போடப்பட்டு, மீதியாகும் ஓரிரு பாட்டில்களை தனியார் மருத்துவமனைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும், தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுடன் உதவிக்கு வருபவர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்படுவதாக சிலர் கூறிவந்தனர்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சிவன்அருள் கூறியதாவது:-
நடவடிக்கை
தமிழக அரசு அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போட உத்தரவிட்டுள்ளது. மாவட்டத்திற்கு வரும் அனைத்து கொரோனா தடுப்பூசி மருந்துகள், பேட்ஜ் நம்பர் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு தினமும் அனுப்பப்படும் தடுப்பூசி விபரங்கள் அனைத்தும் இணையதளத்தில் பதிவு செய்யப்படுகிறது.
இதனை தமிழ்நாடு முழுவதும் இருந்து உயரதிகாரிகள் பார்வையிட்டு தேவையான அளவு தடுப்பூசிகள் அனுப்பப்படுகிறது. மேலும் தினமும் போடப்படும் கொரோனா தடுப்பூசிகள் விபரம் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தப்படுகிறது. இதுபோன்று கொரோனா தடுப்பூசி பற்றி தவறான தகவல்கள் பரப்பினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.