வில்லியனூர் அருகே பெண் படுகாயம்: வெடிகுண்டு பதுக்கிய ரவுடி உள்பட 3 பேர் கைது
வில்லியனூர் அருகே வெடிகுண்டு வெடித்ததில் பெண் படுகாயமடைந்ததையொட்டி ரவுடி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வில்லியனூர்,
வில்லியனூரை அடுத்த கோர்க்காடு கிராமத்தில் பொறையாத்தம்மன் கோவில் பகுதியில் கடலூர் வண்டிப்பாளையத்தை சேர்ந்த இருளர் இனத்தினர் குடில் அமைத்து வசித்து வருகின்றனர். அங்கு வசிக்கும் சந்திரன் என்பவரது மனைவி செல்லியம்மாள் (வயது 24) மறைவான பகுதிக்கு சென்றபோது அங்கு கிடந்த மர்மபொருளை எடுத்து பார்த்தார். அது திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
இதில் செல்லியம்மாளின் இடது கை சிதைந்தது. அவர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் அது நாட்டு வெடிகுண்டு என்பது கண்டறியப்பட்டது.
தொடர்ந்து போலீசார் அங்கு விசாரணை நடத்தினர். இதில் ஏற்கனவே ரவுடிகள் சிலர் அங்கு குண்டுகளை மறைத்து வைத்து இருந்ததும், அவை வெடித்து சிதறியதும் தெரியவந்தது.
மீண்டும் அதே கும்பல் வைத்த குண்டு வெடித்து இருக்கலாமா? என்பது குறித்து விசாரித்தனர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. போலீஸ் மோப்ப நாயும் துப்பு துலக்கியது.
இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த ரவுடி பிரகாஷ் (26), ராஜேந்திரன் (26), ராமசாமி (27) ஆகியோர் தான் கடந்த 2 நாட்களுக்கு முன் வெடிகுண்டை மறைத்து வைத்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.
வெடிகுண்டை பதுக்கி வைத்து இருந்தது ஏன்? எதிரிகளை பழிவாங்கும் முயற்சியாக வைத்து இருந்தார்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.