பூங்காவில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி வழக்கு; மாநகராட்சி பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

பூங்காவில் உள்ள பொது இடத்தை ஆக்கிரமித்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரியுள்ளார்.

Update: 2021-06-06 12:52 GMT
மாத்தூர் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய காலனி குடியிருப்போர் நலச் சங்கத்தின் தலைவர் திருஞானம். இவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘எங்கள் குடியிருப்புக்கு அருகே, 1983-ம் ஆண்டு காமராஜர்நகர் என்ற பெயரில் 151 வீட்டு மனைகள் உருவாக்கப்பட்டன. அங்கு பூங்கா, வணிக வளாகம் உள்ளிட்டவற்றுக்காக சுமார் 10 ஆயிரம் சதுரஅடி இடம் ஒதுக்கப்பட்டது. அந்த இடம் காலி மனையாக இருந்ததால் பொதுமக்கள் நடைபயிற்சிக்காகவும், குழந்தைகள் விளையாடுவதற்காகவும் நீண்டகாலமாக பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில் சிலர் அந்த நிலத்தை ஆக்கிரமித்து வேலி அமைத்து, சட்டவிரோதமாக வீடுகள் கட்டியுள்ளனர். இதுகுறித்து சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம், மணலி போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோருக்கு கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி புகார் செய்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, பொது இடத்தை ஆக்கிரமித்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரியுள்ளார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் ஆர்.சுப்பையா, எஸ்.கண்ணம்மாள் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் சிலம்புச்செல்வன் ஆஜராகி வாதிட்டார். அதையடுத்து, சென்னை மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்டோர் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்