கொரோனா பரவல் காரணமாக அதிரடி நடவடிக்கை புதுவையில் பிளஸ்2 பொதுத்தேர்வு ரத்து தமிழகத்தை பின்பற்றி அரசு அறிவிப்பு
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தை பின்பற்றி புதுவையில் பிளஸ்2 தேர்வை ரத்து செய்து அரசு அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
புதுச்சேரி,
கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. இந்தநிலையில், வகுப்புகள் ‘ஆன்லைனில்’ மட்டுமே நடத்தப்பட்டு வந்தன. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு ஏற்கனவே 9ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித்தேர்வையும், 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வையும் ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டது.
பிளஸ்2 பொதுத்தேர்வு மதிப்பெண், உயர்கல்விக்கு மிகவும் முக்கியம் என்பதால் அந்த தேர்வை எப்படியாவது நடத்தி விட வேண்டும் என்ற முயற்சியில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை ஈடுபட்டு வந்தது.
கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால் ஏற்கனவே மே 3 ந்தேதி தொடங்கி நடைபெறுவதாக இருந்த பிளஸ்2 பொதுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, நோய்த்தொற்றின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் நடைபெற இருந்த சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
அந்த அறிவிப்பை தொடர்ந்து குஜராத், மத்திய பிரதேசம், உத்தரகாண்ட், கோவா ஆகிய மாநிலங்கள், மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடத்தும் பிளஸ்2 பொதுத்தேர்வை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டன.
இந்தநிலையில் மாணவர்களின் நலன் கருதி தமிழகத்தில் பிளஸ்2 தேர்வு ரத்து செய்யப்படுவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கொரோனா பரவல் காரணமாக மத்திய அரசு, சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு இந்த ஆண்டு நடக்கவிருந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ஏற்கனவே ரத்து செய்துள்ளது. பல்வேறு மாநிலங்களும் இதே காரணத்திற்காக, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்துள்ளன.
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்துவது குறித்து, கடந்த 3 நாட்களாக பள்ளி அளவில் தொடங்கி, மாவட்டம் மற்றும் மாநில அளவில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் சங்கங்கள், கல்வியாளர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், ஊடகவியலாளர்கள், பொது சுகாதாரம் மற்றும் உளவியல் நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் கருத்துகள் கவனமுடன் கேட்டறியப்பட்டன.
பல்வேறு தரப்பினரும் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து ஆதரவாகவும், மறுத்தும் கருத்துகளை தெரிவித்திருந்தாலும், அனைத்து தரப்பினரும் மாணவர்களின் உடல் மற்றும் மன நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கருத்தில் உறுதியாக உள்ளனர்.
மாநில கல்வித்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மட்டுமே உயர்கல்வி வாய்ப்புகளுக்கான தகுதியாக கருதப்படவேண்டும் என்ற கொள்கை நிலைப்பாட்டில் இந்த அரசு உறுதியாக இருந்தாலும், தேர்வினை மேலும் தள்ளி வைப்பது, மாணவர்களை மனதளவில் பாதிப்பிற்கு உள்ளாக்கும் என்று டாக்டர்கள் கருதுவதால், அவர்களது அறிவுரை மற்றும் பல்வேறு தரப்பில் இருந்தும் வரப்பெற்ற ஆலோசனைகளின் அடிப்படையில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு இந்த ஆண்டு ரத்து செய்யப்படுகிறது.
இந்தநிலையில் மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பதை முடிவு செய்ய, பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தலைமையில், உயர்கல்வித்துறை செயலாளர், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர், பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆகியோரை கொண்ட ஒரு குழு அமைக்கப்படும்.
இந்த குழு மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து ஆய்வு செய்து, விரைவில் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும். இந்தக்குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதித்தேர்வு மதிப்பெண் வழங்கப்படும்.
அவ்வாறு வழங்கப்படும் மதிப்பெண்களை கொண்டு மட்டுமே, தமிழகத்தில் உள்ள அனைத்து உயர் கல்வி நிறுவனங்களிலும் சேர்க்கை நடைபெறும்.
பெருந்தொற்று காரணமாக தமிழகத்தில் பொதுத்தேர்வுகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், அகில இந்திய அளவில் நடத்தப்படும் 'நீட்' போன்ற நுழைவுத் தேர்வுகளை நடத்துவது உகந்ததாக இருக்காது என்று தமிழக அரசு கருதுகிறது.
இதுகுறித்த அறிவிப்புகள் இதுவரை எதுவும் வெளிவராத நிலையில், உயர்கல்விக்காக நடத்தப்படும் பல்வேறு நுழைவுத்தேர்வுகளையும் ரத்து செய்ய வலியுறுத்தி பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதி உள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதுவை மாநிலத்திற்கு என்று தனியாக கல்வி வாரியம் எதுவும் கிடையாது. எனவே புதுவை காரைக்கால் பிராந்தியத்திற்கு தமிழக கல்வி வாரியத்தின் நடைமுறைகள் மற்றும் பாடத்திட்டங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. மாகி பிராந்தியத்திற்கு கேரளம், ஏனாம் பிராந்தியத்திற்கு ஆந்திர கல்வி வாரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.
இதேபோல் தான் தேர்வு நடைமுறைகளும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி அந்தந்த கல்வி வாரியத்தின் மூலமாக புதுச்சேரி மாணவர்களுக்கு தேர்வில் கலந்து கொண்டதற்கான மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தற்போது தமிழகத்தில் மாணவர்கள் நலன் கருதி பிளஸ்2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார். மேலும் மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண்கள் வழங்குவது என்பது பற்றி குழு அமைத்து ஆலோசனை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கல்வித்துறை இயக்குனர் ருத்ர கவுடுவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
புதுவை மாநிலத்தில் சுமார் 14 ஆயிரத்து 674 மாணவமாணவிகள் பிளஸ்2 படித்து வருகின்றனர். தமிழகத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைப் பின்பற்றி புதுவை, காரைக்காலில் மாணவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது.
இந்த மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று தமிழக கல்வி வாரியம் கொடுக்கும் வழிகாட்டுதலின்படி இங்கும் மதிப்பெண்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.