தென்மேற்கு பருவமழை தொடங்கியது

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. தொடர் மழையால் பூங்காக்களில் மலர்கள் அழுகின.

Update: 2021-06-05 23:37 GMT
ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. தொடர் மழையால் பூங்காக்களில் மலர்கள் அழுகின.

பனி மூட்டம்

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் தென்மேற்கு பருவமழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதும், நீலகிரியில் மழை பெய்ய தொடங்கும். அதன்படி நீலகிரியில் தென்மேற்குபருவமழை தொடங்கி பந்தலூர், கூடலூர் பகுதிகளில் பரவலாக பெய்து வருகிறது.

ஊட்டியில் கடந்த 2 நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் இருப்பதோடு, அவ்வப்போது சாரல் மழை பரவலாக பெய்கிறது. இதனால் மேகம் மற்றும் பனி மூட்டம் மலைகளை சூழ்ந்து உள்ளது.

தொடர் மழை

வாகனங்களில் காய்கறிகள், பழங்களை விற்பனை செய்பவர்கள் மழையில் நனையாமல் இருக்க தார்ப்பாய் போட்டு மூடி பயன்படுத்துகின்றனர்.

 முழு ஊரடங்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் மழையில் நனையாமல் இருக்க சாலையோரங்களில் ஒதுங்கி நிற்பதை காண முடிந்தது.

கோடை சீசனையொட்டி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பூந்தொட்டிகளில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டது. 

சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டதால் கொரோனா விழிப்புணர்வு அலங்காரம் வடிவமைக்கப்பட்டது. தொடர் மழை பெய்து வருவதால் திறந்தவெளியில் வைக்கப்பட்ட பூந்தொட்டிகள் மற்றும் செடிகளில் பூத்துக்குலுங்கிய மலர்களில் தண்ணீர் தேங்கி இருக்கிறது. இதனால் மலர்கள் அழுகி உள்ளன. புதிதாக முளைக்கும் மொட்டுகளும் பூக்காமல் போகிறது. 

மலர்கள் அழுகின

இருப்பினும் அந்த அலங்காரம் அகற்றப்படாமல் அப்படியே உள்ளது. மலர் மாடம், கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்ட மலர்கள் பாதுகாப்பாக உள்ளன. இதேபோல் ஊட்டி ரோஜா பூங்காவில் பூத்து குலுங்கிய ரோஜா மலர்கள் தொடர் மழையால் அழுகி வருகின்றன. 

இதனை பணியாளர்கள் வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நடப்பாண்டில் சுற்றுலா பயணிகள் கண்ணில் படாமலேயே மலர்கள் அழுகி உள்ளது.

மழை அளவு

நீலகிரியில் நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேரத்தில் முடிவடைந்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- நடுவட்டம்-3, கல்லட்டி-4, அவலாஞ்சி-4, கோடநாடு-7, கீழ் கோத்தகிரி-23, பந்தலூர்-7.5 உள்பட மொத்தம் 59.5 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இதன் சராசரி 2.05 மி.மீ. ஆகும்.

மேலும் செய்திகள்