முழு கவச உடை அணிந்து கிருமி நாசினி தெளிக்கும் தன்னார்வலர்கள்
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் முழு கவச உடை அணிந்து தன்னார்வலர்கள் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர்.
ஊட்டி
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் முழு கவச உடை அணிந்து தன்னார்வலர்கள் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர்.
காய்ச்சல் முகாம்கள்
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதன் தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. கடந்த 2 நாட்களாக தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக அனைத்து மையங்களிலும் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டு உள்ளது.
எனினும் கிராம சுகாதார செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கின்றனர். கொரோனா அறிகுறி தென்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு காய்ச்சல் உள்ளதா? என்று கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
சுகாதார பணிகள்
ஊட்டி நகராட்சியில் 340-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது 120 இடங்கள் தனிமைப்படுத்தி கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அப்பகுதிகளில் அறிகுறி தென்பட்ட நபர்களுடன் முதல் மற்றும் இரண்டாம் நிலை தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஊட்டியில் கட்டுப்பாட்டு பகுதிகளில் தன்னார்வலர்கள் மூலம் அறிகுறிகள் உள்ளதா? என்று வீடு, வீடாக கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. காந்தல் பகுதியில் வீடுகள் நெருக்கமாக உள்ளன. அங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கொரோனா கண்டறியப்பட்ட இடங்களில் பிளீச்சிங் பவுடர் போட்டு சுகாதார பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
கிருமி நாசினி தெளிப்பு
இந்த நிலையில் நகராட்சி மூலம் தன்னார்வலர்கள் மேலும் 20 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் காந்தல் பகுதியில் உள்ள கட்டுப்பாட்டு இடங்களில் தெருக்கள், வீடுகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். முழு பாதுகாப்பு கவச உடை அணிந்து சுகாதார பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல் ஊட்டியில் மற்ற தனிமைப்படுத்தப்பட்ட இடங்களிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.காந்தல் பகுதியில் 30 பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதியாகி தனிமைப்படுத்தப்பட்டும், மருந்து-மாத்திரைகள் வாங்க செல்வதாக கூறி சாலைகளில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. இதனால் சாலையின் குறுக்கே தடுப்புகள் வைத்து மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.