சேலத்தில் கொரோனா சிகிச்சை மையங்களில் 364 படுக்கைகள் காலியாக உள்ளன
சேலத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் 364 படுக்கைகள் காலியாக உள்ளன.
சேலம்:
சேலத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் 364 படுக்கைகள் காலியாக உள்ளன.
டிஸ்சார்ஜ்
சேலம் மாவட்டத்தில் நேற்று 1,171 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 2 நாட்களாக சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. குறிப்பாக தொற்று பாதிக்கப்பட்டவர்கள் தினமும் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வருகின்றனர்.
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கூடுதலாக ஆக்சிஜன் படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளதால் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் உடனுக்குடன் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் வருகிறது. இதுதவிர சேலம் இரும்பாலை பகுதியில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் 250-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
364 படுக்கைகள் காலி
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மட்டும் தினமும் 30 முதல் 50 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வருகின்றனர். அதே நேரத்தில் கொரோனா சிறப்பு மையங்களில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வருகின்றனர். இதனால் சேலத்தில் உள்ள கொரோனா சிறப்பு மையங்களில் படுக்கைகள் தற்போது காலியாக உள்ளன.
சேலம் சோனா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா மையத்தில் தற்போது 33 படுக்கைகளும், தொங்கும் பூங்கா பகுதியில் உள்ள சிகிச்சை மையத்தில் 95 படுக்கைகளும் காலியாக உள்ளன. மேலும் சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் 68 இடங்களும், கோரிமேடு கொரோனா சித்தா சிகிச்சை மையத்தில் 50 இடங்களும் காலியாக உள்ளது. சேலம் பொன்னம்மாப்பேட்டை பகுதியில் உள்ள ஐ.ஐ.டி. மையத்தில் 53 இடங்களும், மணியனூரில் உள்ள சட்டக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் 65 படுக்கைகளும் காலியாக உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மொத்தம் 364 படுக்கை வசதிகள் காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.