ஈரோட்டில் 2 இடங்களில் செயல்பட்டு வந்த கொரோனா ‘ஸ்கிரீனிங்’ மையம் ஒரே இடத்துக்கு மாற்றம்

ஈரோட்டில் 2 இடங்களில் செயல்பட்ட வந்த கொரோனா ‘ஸ்கிரீனிங்’ மையம் ஒரே இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.

Update: 2021-06-05 21:10 GMT
ஈரோடு
ஈரோட்டில் 2 இடங்களில் செயல்பட்ட வந்த கொரோனா ‘ஸ்கிரீனிங்’ மையம் ஒரே இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.
‘ஸ்கிரீனிங்’ மையம்
ஈரோடு மாநகராட்சி பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு அவர்களின் நோய் பாதிப்பு தன்மையை அறிய, ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா ‘ஸ்கிரீனிங்’ மையம்       செயல்பட்டு வந்தது.
இங்கு தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் அளவு, நுரையீரல் பாதிப்பு போன்றவை சி.டி. ஸ்கேன் மூலம் கண்டறியப்பட்டு, அவர்களின் பாதிப்பு தன்மைக்கேற்ப மருத்துவமனை சிகிச்சைக்கும், வீட்டு தனிமையில் இருக்கவும் டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். மேலும் ஈரோடு பஸ் நிலையம் அருகே உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்திலும் ‘ஸ்கிரீனிங்’ மையம் அமைக்கப்பட்டு இருந்தது.
கலைமகள் பள்ளிக்கூடம்
இந்தநிலையில், ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் வேறு நோயால் பாதிக்கப்பட்டவர்களும் சிகிச்சைக்காக வந்து செல்வதால், அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்கவும், மேலும் ‘ஸ்கிரீனிங்’ மையத்தை ஒரே இடத்தில் செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. அதன்படி ஈரோடு அரசு ஆஸ்பத்திரி மற்றும் மாநகராட்சி திருமண மண்டபத்தில் செயல்பட்டு வந்த ‘ஸ்கிரீனிங்’ மையங்கள் ஈரோடு மீனாட்சி சுந்தரனார் சாலையில் உள்ள கலைமகள் பெண்கள் மேல்நிலை பள்ளிக்கூடத்துக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டது.
இந்த பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்டு உள்ள ‘ஸ்கிரீனிங்’ மையம் நேற்று முன்தினம் முதல் செயல்பாட்டுக்கு வந்தது. எனவே, தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கலைமகள் பள்ளிக்கூடத்தில் செயல்படும் ‘ஸ்கிரீனிங்’ மையத்துக்கு சென்று தங்களது பாதிப்பு தன்மையை அறிந்து கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்