3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நகல் எரிப்பு போராட்டம்

கடலூர் மாவட்டத்தில் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நேற்று நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-06-05 17:46 GMT
காட்டுமன்னார்கோவில், 

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு  கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5-ந்தேதியன்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

 இந்த சட்டத்துக்கு எதிராக தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். 

அந்த வகையில் நேற்று ஜூன் 5-ந்தேதி என்பதால் இந்த 3 சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தியும்,  இலவச மின்சாரத்தை பறிக்கும் மின்சார ஒழுங்குமுறை சட்டத்தை திரும்பப்பெற வேண்டும், 

விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க ஏற்பாடு  செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி   அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் கடலூர் மாவட்டம் முழுவதும் 5-ந் தேதி (அதாவது நேற்று) அனைத்து வீடுகளின் முன்பும் கோலமிட்டு, நகல் எரிப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது


காட்டுமன்னார்கோவில்

அந்த வகையில் காவிரியின் கடைமடை பகுதியாக இருக்கும் கடலூர் மாவட்டம்  காட்டுமன்னார் கோவில் அருகே கண்டமங்கலம் கிராமத்தில் நகல் எரிக்கும் போராட்டம் நடைபெற்றது. 

 இதற்கு காவிரி டெல்டா பாசன விவசாய சங்கத் தலைவர் இளங்கீரன் தலைமை தாங்கினார். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ், விவசாய சங்க நிர்வாகி பாலமுருகன் ஆகியோர், முன்னிலை வகித்தார்.

 இதில் விவசாயிகளுக்கு எதிராக 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு இயற்றிய  தினமான நேற்று(5-ந்தேதி) விவசாயிகள் தங்கள் கையில் வைத்திருந்த சட்ட நகலை எரிக்க முற்பட்டனர்.

 உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காட்டுமன்னார் கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணபாலன், மற்றும் தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லெனின் ஆகியோர் விவசாயிகளிடமிருந்து சட்ட நகலை பறிக்க முற்பட்டனர். 

அப்போது விவசாயிகள் சட்ட நகலை கிழித்து எறிந்தனர்.  இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

திட்டக்குடி

இதேபோல் மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக நேற்று திட்டக்குடியில்  தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் விவசாய சங்க வட்ட தலைவர் அன்பழகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வட்டக்குழு உறுப்பினர் பாண்டியன் மற்றும் சங்க நிர்வாகிகள் அவரவர் வீடுகளின் முன்பு வேளாண் சட்ட நகல் எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதேபோல் திட்டக்குடி அருகே இடைச்செருவாய் கிராமத்தில் மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வட்ட செயலாளர் மகாலிங்கம் தலைமை தாங்கினார்.

 ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற கோரியும், மத்திய அரசை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.  இதில் சங்க நிர்வாகிகள் நேரு, புகழேந்தி, கோவிந்தன், இளவரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

புவனகிரி

புவனகிரியில் அகில இந்திய விவசாய சங்கத்தினர் மத்திய அரசை கண்டித்து புவனகிரி தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு விவசாய அணி மாவட்ட துணை செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் சதாநந்தம், ஒன்றிய செயலாளர் காளி கோவிந்தராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர் சட்ட நகலை எரித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர் . இதில்  ராஜநீதிமாறன், மதிநிறைச்செல்வன், லெனின், முருகன், பிரபு, அண்ணாதுரை, கருணாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


பரங்கிப்பேட்டை 

பரங்கிப்பேட்டையில் உள்ள தபால் நிலையம் முன்பு  அகில இந்திய விவசாய சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில்  விவசாய சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் கற்பனைசெல்வம் கலந்து கொண்டு கண்டனம் தெரிவித்து பேசினார். இதில் அகில இந்திய விவசாய சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பண்ருட்டி

பண்ருட்டி அடுத்த கீழக் கொல்லை பஸ் நிறுத்தம் அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. 


இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகி கணேசன் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு விவசாய சங்கத்தை சேர்ந்த பரசுராமன், ராமலிங்கம், பழனி, பக்தவச்சலம் ஆகியோர் கலந்துகொண்டு வேளாண் சட்ட நகல்களை எரித்து தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.

விருத்தாசலம்

விருத்தாசலத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் இந்தியா சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு வட்டார தலைவர் ராவண ராஜன் தலைமை தாங்கினார். இந்திய மாதர் தேசிய சம்மேளனம் மாவட்ட தலைவர் அறிவழகி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் விஜய பாண்டியன், மாவட்ட குழு உறுப்பினர் வேல்முருகன், ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

மேலும் செய்திகள்