மாணவிக்கு பாலியல் தால்லை
மயிலாடுதுறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
புகார்
மயிலாடுதுறையை சேர்ந்தவர் 21 வயது மாணவி தற்போது மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர், கடந்த 2010-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை மயிலாடுதுறையில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாணவி, மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு ஆன்லைன் மூலம் புகார் அனுப்பினார்.
பாலியல் தொல்லை
இந்த புகாரில் அந்த மாணவி தான் பள்ளியில் படித்தபோது உடற்கல்வி ஆசிரியர் அண்ணாதுரை(வயது50) என்பவரிடம் தடகள விளையாட்டுக்கான பயிற்சி பெற்றதாகவும், அந்த காலத்தில் ஆசிரியர் அண்ணாதுரை தன்னிடம் இரட்டை அர்த்தத்தில் பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் என்னை(மாணவியை) தொடர்பு கொண்ட உடற்கல்வி ஆசிரியர் அண்ணாதுரை, கல்வி உதவித்தொகை பணம் வந்துள்ளதாகவும் இந்த பணத்தை தனது வீட்டுக்கு வந்து வாங்கி செல்லுமாறு கூறினார். இதனால் நான் அவரது வீட்டுக்கு சென்றேன். அப்போது உடற்கல்வி ஆசிரியர் அண்ணாதுரை எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.
கைது
இதைப்போல பள்ளியில் படித்த போது எனக்கு பலமுறை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டு உள்ளது.
இந்த புகார் குறித்து விசாரணை நடத்துமாறு மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதன்பேரில் விசாரணை மேற்கொண்ட மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று உடற்கல்வி ஆசிரியர் அண்ணாதுரையை கைது செய்தனர்.
போலீஸ் நிலையம் முன்பு குவிந்தனர்
உடற்கல்வி ஆசிரியர் அண்ணாதுரை கைது செய்யப்பட்ட தகவல் அறிந்த சம்பந்தப்பட்ட பள்ளியின் ஆசிரியர்கள் சிலர் மற்றும் அவரிடம் பயிற்சி பெறும் 25-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ- மாணவிகள் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் முன்பு குவிந்தனர். அங்கு குவிந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள், உடற்கல்வி ஆசிரியர் அண்ணாதுரை எந்த தவறும் செய்யவில்லை. அவர் மீது உள்நோக்கத்துடன் மாணவி புகார் அளித்துள்ளார் என கூறினர்.
அப்போது அங்கு வந்த போலீசார் மாணவர்களையும், ஆசிரியர்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.