மளிகை பொருட்கள் தொகுப்பு தயார் செய்யும் பணி மும்முரம்

ரேஷன் கடைகள் மூலம் வினியோகம் செய்வதற்கு மளிகை பொருட்கள் தொகுப்பு தயார் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2021-06-05 17:27 GMT
பொள்ளாச்சி

ரேஷன் கடைகள் மூலம் வினியோகம் செய்வதற்கு மளிகை பொருட்கள் தொகுப்பு தயார் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மளிகை பொருட்கள் தொகுப்பு

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக காய்கறி, மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மூடப்பட்டு உள்ளன. 

இந்த நிலையில் காய்கறிகள் வாகனங்கள் மூலம் குடியிருப்புகளுக்கு நேரடியாக சென்று விற்பனை செய்யப்படுகிறது. இதற்கிடையில் ரேஷன் கடைகள் மூலம் 14 வகையான மளிகை பொருட்கள்  தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இதை தொடர்ந்து பொருட்கள் வழங்குவதற்கு வீடு, வீடாக டோக்கன் வினியோகம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் மளிகை பொருட்கள் கொண்ட தொகுப்பை தயார்ப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
இதுகுறித்து நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் கூறியதாவது:-

டோக்கன் வினியோகம்

பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி, வால்பாறை, ஆனைமலை, கிணத்துக்கடவு தாலுகாக்களில் 389 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த ரேஷன் கடைகள் மூலம் 2 லட்சத்து ஆயிரத்து 993 ரேஷன்கார்டு தாரர்களுக்கு மளிகை பொருட்கள் கொண்ட தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

 இதற்காக வீடு, வீடாக சென்று ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கன் வழங்கி வருகின்றனர். இதுவரைக்கும் 1 லட்சத்து 66 ஆயிரத்து 793 ரேஷன் கார்டுதாரர்களுக்கு டோக்கன் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது. இது 82.57 சதவீதமாகும்.

இந்த நிலையில் கோதுமை, ரவை, உப்பு, துணிப்பை, சோப்பு, மிளகாய் தூள், சீரகம், கடுகு, சர்க்கரை, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மஞ்சள் தூள், குளியல் சோப்பு, டீத்தூள் உள்பட 14 வகையான மளிகை பொருட்கள் கொண்ட தொகுப்பு தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. 

தயார் செய்யப்படும் மளிகை தொகுப்புகள் அந்தந்த பகுதிகளில் உள்ள நுகர்பொருள் வாணிக கழக குடோனிற்கு அனுப்பி வைக்கப்படும். அங்கிருந்து அந்தந்த பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அனுப்பி, பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும். ரேஷன் கடைகள் மூலம் விரைவில் மளிகை பொருட்கள் கொண்ட தொகுப்பு வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்