குப்பியில் சூதாட்டம் நடப்பதை தடுப்பதில் அலட்சியம் 2 போலீஸ்காரா்கள் பணி இடைநீக்கம் துமகூரு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு

குப்பியில் சூதாட்டம் நடப்பதை தடுப்பதில் அலட்சியமாக இருந்த 2 போலீஸ்காரர்களை பணி இடைநீக்கம் செய்து துமகூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வம்சி கிருஷ்ணா உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-06-05 16:55 GMT
துமகூரு, 

பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் தேவையில்லாமல் சுற்றுவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், துமகூருவில் ஊரடங்கு மத்தியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. குறிப்பாக துமகூரு மாவட்டம் குப்பி தாலுகாவில் அதிகஅளவில் சூதாட்டம் நடப்பதாக புகார்கள் வந்தது.

அதே நேரத்தில் குப்பியில் சூதாட்டம் நடப்பது பற்றி போலீசாருக்கு தகவல் தெரிந்தும், அதுபற்றி போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கோரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வம்சி கிருஷ்ணாவுக்கு, சிரா போலீஸ் சூப்பிரண்டு குமாரப்பாவும் புகார் கடிதமும் கொடுத்திருந்தார். இதுகுறித்து விசாரணை நடத்த வம்சி கிருஷ்ணா உத்தரவிட்டு இருந்தார்.

இந்த விசாரணையில், குப்பி தாலுகாவில் ஊரடங்கு நேரத்தில் பல்வேறு கிராமங்களில் பணம் வைத்து சூதாட்டம் நடந்து வருவதும், இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிந்திருந்ததும், அதனை தடுக்கவோ, சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, குப்பி போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர்களான சித்தேகவுடா, மல்லேஷ் ஆகிய 2 பேரையும் பணி இடைநீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு வம்சி கிருஷ்ணா உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையில், சூதாட்ட விவகாரத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், பிற போலீசார் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல், போலீஸ்காரர்களை மட்டும் வம்சி கிருஷ்ணா பணி இடைநீக்கம் செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்