திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் மீண்டும் தொடங்கியது

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் மீண்டும் தொடங்கியது. முகாமை கலெக்டர் சிவன்அருள் தொடங்கி வைத்தார்.

Update: 2021-06-05 16:37 GMT
திருப்பத்தூர்

தடுப்பூசி முகாம் மீண்டும் தொடக்கம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பல்வேறு இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்று வந்தது. கடந்த 2-ந் தேதி முதல் தடுப்பூசி மருந்து இல்லாததால் தடுப்பூசி முகாம் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் 6 ஆயிரம் கொரோனா தடுப்பூசி மருந்துகள் மாவட்டத்திற்கு வந்தது. அதைத்தொடர்ந்து  திருப்பத்தூர் சிவராஜ் பேட்டையில் நடைபெற்ற முகாமை மாவட்ட கலெக்டர் சிவன்அருள், ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து ஆய்வு செய்தனர்.
 நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் விவேக், கூட்டுறவு சங்கத் தலைவர் எஸ்.ராஜேந்திரன், முன்னாள் நகராட்சி தலைவர் அரசு மற்றும் பலர் கலந்து கொண்டனர். ‌

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 

முகாமில் 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆர்வமாக வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

இதுகுறித்து கலெக்டர் சிவன்அருள் கூறியதாவது:-

மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மண்டபங்கள், சமுதாயக் கூடங்கள் என 50-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வருகிற 17-ந் தேதிக்கு பிறகு மீண்டும் தமிழக அரசு தடுப்பூசிகளை வழங்கும் என அவர் கூறினார்.

மேலும் செய்திகள்