ஆரணியில் தடுப்பூசி போடாதவர்கள் கடைகளில் வேலை பார்க்க தடை

ஆரணியில் தடுப்பூசி போடாதவர்கள் கடைகளில் வேலை பார்க்க தடை என்று உதவி கலெக்டர் நாராயணன் கூறினார்.

Update: 2021-06-05 16:23 GMT
ஆரணி

ஆலோசனை கூட்டம்

தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு சில தளர்வுகளுடன் 14-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து நேற்று ஆரணி உதவி கலெக்டர் அலுவலகத்தில், உதவி கலெக்டர் நாராயணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. 

நேர்முக உதவியாளர் மூர்த்தி, ஆரணி நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) டி. ராஜவிஜயகாமராஜ், டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகு, மண்டல துணை தாசில்தார் குமரேசன், வருவாய் ஆய்வாளர் வேலுமணி, நகராட்சி வருவாய் அலுவலர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் செந்தில் குமார் வரவேற்றார்.

தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்

கூட்டத்தில் உதவி கலெக்டர் பேசுகையில் நாளை முதல் மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே திறந்திருக்கவேண்டும். நடைபாதை காய்கறி கடைகள் பழம் பூக்கடைகள் செயல்படலாம். கடைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். தடுப்பூசி போடாதவர்கள் பணிபுரியக்கூடாது.
அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளும்போது கொரோனா பரிசோதனை செய்யாதவர்கள் இருந்தால் அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள். அல்லது அந்த கடைக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

நடமாடும் காய்கறி, பழக் கடைகள் ஒரே இடத்தில் நிரந்தரமாக நின்று வியாபாரம் செய்யக் கூடாது. ஆட்டோக்களுக்கு இ-பதிவு செய்து இரண்டு பயணிகளுடன் பயணிக்கலாம் என பேசினார்.
 ஆலோசனை கூட்டத்தில் வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்