ரேஷன் கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு பொருட்களை வாங்கி சென்றனர்

உடுமலையில் உள்ள ரேஷன் கடைகளில், ஜூன் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் நேற்று தொடங்கியது. பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு வரிசையாக நின்று பொருட்களை வாங்கி சென்றனர்.

Update: 2021-06-05 15:57 GMT
உடுமலை
உடுமலையில் உள்ள ரேஷன் கடைகளில், ஜூன் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் நேற்று தொடங்கியது. பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு வரிசையாக நின்று பொருட்களை வாங்கி சென்றனர்.
அத்தியாவசிய பொருட்கள்
உடுமலை தாலுகாவில் முழுநேர ரேஷன்கடைகள் 127-ம், பகுதி நேர ரேஷன்கடைகள் 56-ம் என மொத்தம் 183 ரேஷன்கடைகள் உள்ளன. அரிசி ரேஷன் அட்டைகள் மொத்தம் 1 லட்சத்து 6 ஆயிரத்து 30 உள்ளன. இந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி ஜூன் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களை பெறுவதற்காக, ஒரே நாளில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி ரேஷன்கடை பணியாளர்கள், ரேஷன் அட்டைதாரர்களுக்கு வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கினர். ரேஷன் கடையில் அத்தியாவசிய பொருட்கள் இருப்பைப்பொறுத்து நாள் ஒன்றுக்கு100 டோக்கன்கள் முதல் 200 டோக்கன்களுக்கு பொருட்களை வினியோகிக்கும் வகையில் டோக்கன்கள் வழங்கப்பட்டன.
சமூக இடைவெளி
இந்த டோக்கன் வழங்கும் பணிகள் நேற்று முன்தினம் வரை நடந்தது. அந்த டோக்கன்களில், அந்த ரேஷன் அட்டைதாரர் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக எந்த தேதியில், எத்தனை மணிக்கு வரவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து ரேஷன்கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவது நேற்று தொடங்கப்பட்டது. ஏற்கனவே டோக்கன் வழங்கப்பட்டிருந்ததால் பொதுமக்கள் நெரிசல் இல்லாமல், சமூக இடைவெளி விட்டு வரிசையில் நின்று சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்கி சென்றனர்.

மேலும் செய்திகள்