பாவூர்சத்திரம் பகுதியில் ஊரடங்கால் செடியில் வீணாகும் பூக்கள்
பாவூர்சத்திரம் சுற்று வட்டாரத்தில் ஊரடங்கால் செடியிலேயே பூக்கள் வீணாவதால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.
பாவூர்சத்திரம்:
கொரோனா 2-வது அலை காரணமாக தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் ஏராளமான தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள். வழிபாட்டு தலங்களிலும் விழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. திருமண விழா, காதணி விழா, புதுமனை புகுவிழா உள்ளிட்ட விழாக்களும் குறைவான நபர்கள் பங்கேற்புடன் எளிமையாக நடத்தப்படுகிறது. இதனால் பூக்களின் தேவைப்பாடும் வெகுவாக குறைந்ததால், பூக்களை சாகுபடி செய்த விவசாயிகள் மற்றும் பூக்கட்டும் தொழிலாளர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான மகிழ்வண்ணநாதபுரம், சிவகாமிபுரம், அருணாப்பேரி, நாகல்குளம், மேலபட்டமுடையார்புரம், சாலைப்புதூர் உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் மல்லி, பிச்சி, செவ்வந்தி, கேந்தி, அரளி, முல்லை, ரோஜா போன்ற பூக்களை சாகுபடி செய்துள்ளனர். இங்கு விளைவிக்கப்படும் பூக்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.
தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பூக்களின் தேவைப்பாடு குறைந்ததால், அறுவடைக்கு தயாரான பூக்களை பறித்து வெளியூர்களுக்கு அனுப்ப முடியாதநிலை உள்ளது. இதனால் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் விளைவிக்கப்பட்ட பூக்கள், செடிகளிலேயே கருகி வீணாகும் நிலை உள்ளது.
இதுகுறித்து பூக்களை சாகுபடி செய்த விவசாயிகள் கூறியதாவது:-
பாவூர்சத்திரம் சுற்று வட்டார பகுதிகளில் விளைவிக்கப்படும் பூக்களை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்து வந்தோம். இங்கு விளைவிக்கப்படும் பூக்களை மாலையாக தொடுத்தும் ஏராளமான கோவில்களில் நடைபெறும் விழாக்கள் மற்றும் திருமணம் உள்ளிட்ட பல்வேறு விழாக்களுக்கும் மொத்தமாக அனுப்பி வந்தோம்.
தற்போது ஊரடங்கால் அனைத்து விழாக்களும் எளிமையாக நடத்தப்படுவதால் பூக்களின் தேவை வெகுவாக குறைந்து விட்டது. இதனால் பல ஆயிரக்கணக் கான ஏக்கரில் அறுவடைக்கு தயாரான பூக்களை பறிக்கப்படாமலயே விடப்பட்டுள்ளன. அவைகள் கருகி வீணாகும் நிலை உள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.