அருவிகளில் தண்ணீர் கொட்டியும் களையிழந்த குற்றாலம்

குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டியும் சுற்றுலா பயணிகளை அனுமதிக்காததால் களையிழந்து காணப்படுகிறது.

Update: 2021-06-04 20:28 GMT
தென்காசி:
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள அருவிகளில் குளிப்பதற்காக ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்வது வழக்கம். இங்கு ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சாரல் மழை பொழிந்து, குளுமையான சீசன் நிலவும். அப்போது இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து சுற்றுலா பயணிகள் மகிழ்வர். குற்றாலத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சீசன் தொடங்கிய நிலையில், ஊரடங்கு காரணமாக சுற்றுலா பயணிகள் அங்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் ஊரடங்கில் சற்று தளர்வு அளிக்கப்பட்டு, அருவிகளில் சுற்றுலா பயணிகள் சமூக இடைவெளியுடன் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

அதேபோன்று தற்போதும் கடந்த மாதம் குற்றாலத்தில் சீசன் தொடங்கிய நிலையில், கொரோனா பரவல் 2-வது அலை காரணமாக, அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
தற்போது குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அங்கு குளுமையான சூழல் நிலவுகிறது. எனினும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லாததால், குற்றாலம் களையிழந்து காணப்படுகிறது. அங்குள்ள அனைத்து கடைகளும் பூட்டிக் கிடப்பதால் வெறிச்சோடி கிடக்கிறது. வியாபாரிகளும் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.

மேலும் செய்திகள்