நெல்லை தச்சநல்லூரில் வீடு புகுந்து மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு
நெல்லை தச்சநல்லூரில் வீடு புகுந்து மூதாட்டியிடம் அரிவாளை காட்டி மிரட்டி 5 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
நெல்லை:
நெல்லை அருகே உள்ள தச்சநல்லூரை சேர்ந்தவர் குமாரசாமி. இவருடைய மனைவி லீலா (வயது 78). இவர் நேற்று முன்தினம் மாலையில் வீட்டு கதவை உள்புறமாக பூட்டிவிட்டு டி.வி. பார்த்துக் கொண்டு இருந்தார். அப்போது 4 பேர் கொண்ட மர்ம கும்பல் உள்புறமாக தாழ்ப்பாளை கைவிட்டு திறந்து வீட்டுக்குள் புகுந்தனர். இவர்களைப் பார்த்ததும் லீலா அலறினார். உடனே அவரது வாயை துணியால் பொத்தி அரிவாளை காட்டி மிரட்டி கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
பின்னர் அவர்கள் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து லீலா, நெல்லை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் சப்-இன்ஸ்பெக்டர்கள் முகைதீன் அப்துல்லா, சாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து நகை திருடிய கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.