வீட்டில் குக்கரில் சாராயம் காய்ச்சியவர் கைது

ராமநாதபுரத்தில் பட்டப்பகலில் வீட்டில் குக்கரில் சாராயம் காய்ச்சியவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து சாராயம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2021-06-04 18:49 GMT
ராமநாதபுரம்,ஜூன்
ராமநாதபுரத்தில் பட்டப்பகலில் வீட்டில் குக்கரில் சாராயம் காய்ச்சியவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து சாராயம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ரோந்துப்பணி
முழு ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் மதுபானங்கள் கள்ளத்தனமாக விற்பனை செய்வதை தடுக்கவும், ஊரடங்கு நேரத்தில் தேவையின்றி சுற்றுபவர்களை பிடிக்கவும் கேணிக்கரை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ராமநாதபுரம் அருகே காட்டூரணி எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் ஒரு வீட்டில் சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையிலான போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
குக்கரில் சாராயம்
அப்போது எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் தெய்வம் (வயது 46) என்பவர் தனது வீட்டின் பின் பகுதியில் வைத்து குக்கரில் சாராயம் காய்ச்சி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். 
அவரிடம் இருந்து 3 பாட்டில் சாராயம், 20 லிட்டர் சாராய ஊறல், குக்கர், சாராயம் வடித்து கொண்டு வரும் குழாய், பாத்திரங்கள் முதலியவற்றை பறிமுதல் செய்தனர்.
இந்த சாராயத்தை தனக்காக காய்ச்சியதாக தெய்வம் தெரிவித்தபோதிலும் அக்கம் பக்கத்தினருக்கும் விற்பனை செய்து வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் செய்திகள்