டாஸ்மாக்கில் கொள்ளையடித்த 5 பேர் கைது

காளையார்கோவில் அருகே ஆலங்குடியில் காவலாளியை கட்டிப்போட்டு கடையை உடைத்து மதுபாட்டில்களை அள்ளிச் சென்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.1¼ லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2021-06-04 18:17 GMT
காளையார்கோவில்,  ஜூன்.
காளையார்கோவில் அருகே ஆலங்குடியில் காவலாளியை கட்டிப்போட்டு கடையை உடைத்து மதுபாட்டில்களை அள்ளிச் சென்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.1¼ லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 
மதுபாட்டில்கள் கொள்ளை
காளையார்கோவில் அருகே ஆலங்குடியில் உள்ள அரசு டாஸ்மாக் கடையை உடைத்து மர்ம நபர்கள் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை அள்ளிச் சென்றனர்.
இது குறித்து காளையார்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கொள்ளையர்களை பிடிக்க சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் உத்தரவின் பேரில் காளையார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுரேஷ்குமார் தலைமையில் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் ரஞ்சித், ராமச்சந்திரன், அன்சாரி உசேன், ராஜ்கமல் ஆகியோர் அடங்கிய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
கண்காணிப்பு கேமரா காட்சி
தனிப்படை போலீசார் டாஸ்மாக் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஒருவரை அடையாளம் கண்டனர். அதனைத் தொடர்ந்து அவரை பிடித்து விசாரித்ததில் இந்த கொள்ளை சம்பவத்தில் 5 பேர் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (வயது 26), திருப்புவனம் அருகே மாங்குடியைச் சேர்ந்த பிரேம்குமார் (26), கோமாளிப்பட்டியை சேர்ந்த வெள்ளைச்சாமி (32), அதே ஊரைச் சேர்ந்த  கணேசன் (37) திருப்புவனம் சந்தை கடையை சேர்ந்த ராஜ்குமார் (32) ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.
மதுபாட்டில்கள் பறிமுதல்
கொள்ளையடித்த மதுபாட்டில்களை கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான கணேசனின் மனைவியின் சொந்த ஊரான கருங்குளம் கிராமத்தில் ஒரு கண்மாயில் புதருக்குள் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்துள்ளனர்.
தனிப்படை போலீசார் அந்த மதுபாட்டில்களையும், 3 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்