பணி நிரந்தரம் செய்யக்கோரி அரசு மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
பணி நிரந்தரம் செய்யக்கோரி அரசு மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி:
ஆர்ப்பாட்டம்
அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒப்பந்த தொழிலாளர்களின் பிரதிநிதி மணிவண்ணன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.சி.சி.டி.யு. தொழிற்சங்க மாநில செயலாளர் கோவிந்தராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
அரசு மருத்துவமனைகள் மற்றும் கிராமப்புறங்களில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ெதாழிலாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்யவேண்டும். கொரோனா தொற்று அதிகரித்துவரும் தற்போதைய சூழலில் சிகிச்சையின்போது உருவாகும் மருத்துவ கழிவுகளை அகற்றும் வேலையைச் செய்யும் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து முன்கள பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
காப்பீடு
கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசிகள் போட வேண்டும். 6 மாதகாலத்திற்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். ரூ.50 லட்சத்திற்கு காப்பீடு வழங்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் போதிய அளவில் டாக்டர்களை நியமிக்க வேண்டும். முன்களபணியாளர்கள் அனைவருக்கும் போதிய பாதுகாப்பு நடைமுறைகளை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்து கொண்டனர்.