நள்ளிரவில் கொரோனா கவச  உடையுடன் திரிந்த வாலிபர்

ராமநாதபுரத்தில் நள்ளிரவில் கொரோனா கவச உடையுடன் சுற்றித்திரிந்த வடமாநில வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-06-04 18:03 GMT
ராமநாதபுரம்,ஜூன்
ராமநாதபுரத்தில் நள்ளிரவில் கொரோனா கவச உடையுடன் சுற்றித்திரிந்த வடமாநில வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
கண்காணிப்பு பணி
ராமநாதபுரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கை முறையாக கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கும் பொருட்டு மாவட்ட காவல்துறை சார்பில் 24 மணி நேர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் போலீசார் ராமநாதபுரம் சாலைத்தெரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். 
அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணான தகவலை தெரிவித்துள்ளார். அவரின் நடவடிக்கைகளை பார்க்கும்போது அவர் மனநிலை சரியில்லாதவர் போன்றும், வட மாநிலத்தவர் போன்றும் இருந்தது.
கவச உடை
இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் இரவு காவல் பணியில் ஈடுபட்டிருந்த இந்தி மொழி தெரிந்த காவலாளி ஒருவர் மூலம் போலீசார் விசாரித்தனர். அவரிடமும் முன்னுக்குப் பின் முரணான தகவலை வாலிபர் தெரிவித்துள்ளார். இதனால் போலீசார் அவர் வைத்திருந்த பையை பிரித்து பார்த்தபோது அதில் கொரோனா தொற்றுக்கு பயன்படுத்திய கவச உடை மடித்து வைக்கப்பட்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் இதுகுறித்து அவரிடம் கேட்டபோது கொரோனா என்று மட்டும் கூறிவிட்டு பையை கீழே போட்டு விட்டு தப்பிச் சென்று விட்டார்.
வலைவீச்சு
இதைத் தொடர்ந்து போலீசார் கொரோனா கவச உடை இருந்த பையை தீ வைத்து எரித்தனர். தப்பி ஓடிய வாலிபர் மனநலம் பாதித்தவர் என்றும், அவர் எடுத்து வந்த கவச உடை மூலம் அவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இதனால் அந்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரத்தில் ஊரடங்கால் மக்கள் நடமாட்டம் இல்லாததை பயன்படுத்தி கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்திய கவச உடை உள்ளிட்ட மருத்துவ கழிவுகளை ஆங்காங்கே சர்வ சாதாரணமாக வீசிவிட்டுச் செல்வது வாடிக்கையாகி வருகிறது. அவ்வாறு வீசப்பட்ட கொரோனா கவச உடையை அந்த மனநலம் பாதித்த வாலிபர் எடுத்து வந்து இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
கோரிக்கை
எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இது போன்று மருத்துவக் கழிவுகளை பொதுவெளியில் வீசி செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தப்பிச் சென்ற மனநலம் பாதித்த வாலிபரை தேடி கண்டுபிடித்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்