ராயக்கோட்டை:
உத்தனப்பள்ளியை சேர்ந்த பா.ஜனதா மாவட்ட செயற்குழு உறுப்பினர் பத்மநாபன் என்கிற பதி தனது முகநூல் பக்கத்தில் தி.மு.க. பற்றியும், முன்னாள் தலைவர் கருணாநிதி பற்றியும் அவரது பிறந்தநாளில் கலவரத்தை தூண்டும் வகையில் கருத்துப்பதிவு செய்ததாக சூளகிரி தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் உள்பட சிலர் உத்தனப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி பத்மநாபன் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த நிலையில் தமிழக அரசு மற்றும் போலீசாரை கண்டித்து கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் உத்தனப்பள்ளியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார். அப்போது தமிழக அரசுக்கு எதிராகவும், போலீசாரை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், ஒன்றிய தலைவர் வினோத், மாவட்ட பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட செயலாளர்கள் முருகன், அம்மன் சுரேஷ், சீனிவாசன், பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.