போடி அருகே விவசாயி மர்ம சாவு
போடி அருகே தோட்டத்தில் மர்மமான முறையில் விவசாயி இறந்து கிடந்தார்.
போடி:
தேனி மாவட்டம் போடி சந்தனமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 59). விவசாயி. போடி அருகே மங்கலகோம்பையில் நாகராஜிக்கு சொந்தமான மாந்தோப்பு உள்ளது. இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல் அவர் தனது மாந்தோப்புக்கு சென்றார். ஆனால் அவர் மாலை வரை வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் நாகராஜை ேதடி மாந்தோப்புக்கு சென்றனர். அப்போது அங்கு அவர் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், உடனடியாக இதுகுறித்து குரங்கணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போடி போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன், போடி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் குரங்கணி போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் நாகராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜின் சாவுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.