கருப்பு பூஞ்சைக்கு மேலும் 4 பேர் பாதிப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை தொற்றால் மேலும் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்கனவே 7 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 4 பேர், இந்த கருப்பு பூஞ்சை தொற்றால் தற்போது பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் சாலாமேட்டை சேர்ந்த 48 வயதுடைய நபரும், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள அரும்பட்டை சேர்ந்த 45 வயதுடைய நபரும், வானூரை சேர்ந்த 30 வயது வாலிபரும், விழுப்புரம் இந்திரா நகரை சேர்ந்த 52 வயதுடைய நபரும் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தீவிர சிகிச்சை
இவர்கள் 4 பேரும் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள். இவர்களுக்கு முகத்தில் வீக்கம் ஏற்பட்டதோடு கண்களும் திடீரென சிவப்பு நிறமாக மாறியது. இவ்வாறு கருப்பு பூஞ்சைக்கான அறிகுறிகள் இருந்ததால் உடனடியாக அவர்கள் 4 பேருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் கருப்பு பூஞ்சை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது 4 பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.