கூடுதலாக ரூ.500 கோடிக்கு நிவாரண தொகுப்பு திட்டம் 14-ந் தேதி வரை மேலும் ஒரு வாரத்திற்கு கர்நாடகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு எடியூரப்பா அறிவிப்பு
கர்நாடகத்தில் அமலில் உள்ள ஊரடங்கு வருகிற 14-ந் தேதி வரை மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுவதாக முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று அறிவித்தார். மேலும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டு உள்ள தொழிலாளர்களுக்கு மேலும் ரூ.500 கோடி நிவாரண தொகுப்பு திட்டத்தையும் அறிவித்தார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கத்தில் கடந்த மே மாதம் 11-ந் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகும் கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால், கடந்த மாதம் 24-ந் தேதி முதல் வருகிற 7-ந் தேதி காலை 6 மணி வரை மேலும் 14 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அந்த ஊரடங்கு வருகிற 7-ந் தேதி காலை நிறைவடைகிறது.
கர்நாடகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு விகிதம் 12 சதவீதமாக உள்ளது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு நிபுணர் குழு, கர்நாடகத்தில் அமலில் உள்ள ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை செய்தது. அதன்படி வருகிற 7-ந் தேதி காலை 6 மணி முதல் 14-ந் தேதி காலை 6 மணி 7 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
“கர்நாடகத்தில் கொரோனா பரவலை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக கொரோனா பரவல் குறைந்துள்ளது. ஆனால் கொரோனா பரவலின் சங்கிலித்தொடர் தொடர்ந்து அதே நிலையில் தான் உள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் எனறால், பாதிப்பு விகிதம் 5 சதவீதத்திற்கு கீழ் குறைய வேண்டும் என்று மத்திய அரசு மற்றும் நிபுணர் குழு கூறியுள்ளது.
அதனால் மருத்துவ நிபுணர் குழுவின் பரிந்துரையின்படி, கர்நாடகத்தில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் ஒரு வாரம் அதாவது வருகிற 7-ந் தேதி காலை 6 மணி முதல் 14-ந் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்றுமதி தொடர்பான நிறுவனங்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
கொரோனா பரவல் கட்டுக்குள் வருவதை பொறுத்து, ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து மீண்டும் கலந்து ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும். அரசின் கட்டுப்பாடுகைள பொதுமக்கள் மதித்து நடந்து கொண்டால், ஒரு வாரத்திற்கு பிறகு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்படும். பெங்களூரு உள்பட நகரங்களில் கொரோனா பரவல் குறைந்துள்ளது. ஆனால் கிராமப்புறங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துகளை கொள்முதல் செய்ய முயற்சி செய்து வருகிறோம். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவ பணியாளர்களை தாக்கினால் அத்தகையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கர்நாடகத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு துறை தொழிலாளர்களுக்கு ஏற்கனவே ரூ.1,250 கோடி உதவி திட்டத்தை அறிவித்தேன். அதில் 70 சதவீதம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பல்வேறு துறை தொழிலாளர்கள், தங்களுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று மீனவர்கள் உள்பட பல்வேறு தொழிலாளர்களுக்கு மேலும் ரூ.500 கோடி நிவாரண தொகுப்பு திட்டத்தை அறிவிக்கிறேன்.
அதாவது, விசைத்தறி கூடங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தலா ரூ.3,000, திரைத்துறை மற்றும் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் பணியாற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தலா ரூ.3,000, கர்நாடகத்திற்குள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்கள் உள்பட மீனவர்களுக்கு தலா ரூ.3,000, இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள், சமையலர்களுக்கு தலா ரூ.3,000 உதவித்தொகை வழங்கப்படும்.
42 ஆயிரத்து 574 ஆஷா மருத்துவ ஊழியர்களுக்கு தலா ரூ.3,000, 1.13 லட்சம் அங்கன்வாடி ஊழியர்களுக்கு தலா ரூ.2,000 வழங்கப்படும். அரசு மானியம் பெறாத தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தலா ரூ.5,000 வழங்கப்படும். மசூதிகளில் பணியாற்றுகிறவர்களுக்கு தலா ரூ.3,000 வழங்கப்படும்.
ஊரடங்கால் பால் பயன்பாடு குறைந்துள்ளது. இதனால் பால் உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தில், பால் பவுடர்களை உற்பத்தி செய்ய உத்தரவிட்டுள்ளேன். அந்த பால் பவுடர், நடப்பு ஜூன், ஜூலை ஆகிய 2 மாதங்கள் பள்ளி குழந்தைகளுக்கு இலவசமாக தலா அரை கிலோ வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உணவு தானியங்களுடன் இந்த பால் பவுடரும் வழங்கப்படும். இதனல் அரசுக்கு ரூ.100 கோடி செலவாகும்.
வக்கீல்கள் நல நிதிக்கு ரூ.5 கோடி வழங்க முடிவு செய்யபப்பட்டுள்ளது. இந்த நிதியை பயன்படுத்தி தேவைப்படும் வக்கீல்கள், குமாஸ்தாக்களுக்கு உதவி செய்யலாம். சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கடந்த மே மாதம், நடப்பு ஜூன் மாதங்களுக்கான மின் கட்டணத்தில் நிலையான கட்டணம் தள்ளுபடி செய்யப்படுகிறது. இதனால் அரசுக்கு ரூ.114.70 கோடி நிதிச்சுமை ஏற்படும்.
மற்ற தொழில் நிறுவனங்கள் தங்களின் மே, ஜூன் மாதங்களின் மின் கட்டணத்தை செலுத்த காலஅவகாசம் வருகிற 7-ந் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்த ரூ.500 கோடி உதவித்தொகை திட்டத்தால், 62 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பயன் பெறுவாார்கள். இன்னும் 2 நாட்களில் இந்த திட்ட பயன்கள் வழங்கும் பணி தொடங்கப்படும்.” இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
இந்த பேட்டியின்போது, துணை முதல்-மந்திரிகள் கோவிந்த் கார்ஜோள், அஸ்வத் நாராயண், சுகாதாரத்துறை மந்திரி சுதாகர், தலைமை செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.