பெங்களூருவில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் மந்திரிகள் அதிகாரிகளுக்கு எடியூரப்பா உத்தரவு

பெங்களூருவில் வெள்ள பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மந்திரிகள், அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-06-04 14:35 GMT
பெங்களூரு, 

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை இன்னும் ஓரிரு நாளில் தொடங்க உள்ளது. இதற்கு முன்னதாக அந்த பருவமழை கேரளாவில் நேற்று தொடங்கிவிட்டது. வழக்கமாக தென்மேற்கு பருவமழை காலத்தில் கர்நாடகத்தில் நல்ல மழை பெய்யும். இதன் மூலம் தான் கர்நாடகத்திற்கு அதிக மழை கிடைக்கிறது. இந்த தென்மேற்கு பருவமழை காலத்தில் பெங்களூருவில் அதிக மழை பெய்து, பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்துவது உண்டு.

தென்மேற்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று பெங்களுருவில் மாநககராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். நகரில் அதிக மழை பெய்யும்போது, வெள்ள பாதிப்பு ஏற்படும் இடங்கள் குறித்து எடியூரப்பா கேட்டறிந்தார். அந்த இடங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கும்படி அதிகாரிகளுக்கு எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். இந்த கூட்டத்தில் எடியூரப்பா பேசியதாவது:-

பெங்களூரு மாநகராட்சியில் 8 மண்டலங்கள் உள்ளன. இவற்றில் தலா ஒன்று வீதம் 8 நிரந்தர கட்டுப்பாட்டு மையங்கள் உள்ளன. அத்துடன் 63 தற்காலிக கட்டுப்பாட்டு மையங்களை திறக்க வேண்டும். இந்த கட்டுப்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும். பொதுமக்கள் ஏதாவது மழை பாதிப்பு தொடர்பான புகார்களை கூறினால், உடனே அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெள்ள பாதிப்புகள் ஏற்படும்போது, மீட்பு பணிகளுக்கு தேவையான உபகரணங்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். சாலைகளின் ஓரத்தில் உள்ள கால்வாய்களில் தூர்வார வேண்டும். ராஜகால்வாய்களில் மழைநீர் தடையின்றி செல்ல நடிவடிக்கை எடுக்க வேண்டும். ராஜகால்வாயில் போய் சேரும் சிறிய கால்வாய்களையும் சரிசெய்ய வேண்டும்.

பெரிய கால்வாய்களில் 26 இடங்களில் தண்ணீர் அபாய கட்டத்தை அமையும்போது எச்சரிக்கை செய்யும் சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றை உரிய முறையில் கண்காணிக்க வேண்டும். பெங்களூரு மழை தொடர்பான செயலியில் எந்த பகுதியில் எந்த அளவுக்கு மழை பெய்யும் என்பது குறித்த முன்அறிவிப்பு தகவல்களை சரியான முறையில் வெளியிட வேண்டும். இது நகரவாசிகளுக்கு உதவியாக இருக்கும்.

எந்த பகுதியில் அதிகளவில் தண்ணீர் தேங்கியுள்ளது என்பது குறித்த விவரங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதன் மூலம் வாகன ஓட்டிகள், வேறு பாதையை பயன்படுத்தி பாதுகாப்பாக தங்களின் வீடுகளுக்கு போய் சேர முடியும். பெங்களூருவில் 209 இடங்கள், வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த இடங்களில் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வேண்டும். அதற்கு தேதைவயான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

கால்வாயில் அதிகளவில மழை நீர் வரும்போது, அதை ஏரிகளுக்கு திருப்பி விட்டால் வெள்ள பாதிப்புகளை தடுக்க முடியும். இந்த விஷயத்தில் அதிகாரிகள் உரிய கவனம் செலுத்த வேண்டும். பெங்களூருவில் 440 கிலோ மீட்டர் நீளத்திற்கு கால்வாய்களில் தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளது. இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

இந்த கூட்டத்தில் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், வீட்டு வசதித்துறை மந்திரி சோமண்ணா, வனத்துறை மந்திரி அரவிந்த் லிம்பாவளி, கூட்டுறவுத்துறை மந்திரி எஸ்.டி.சோமசேகர், நகர வளர்ச்சித்துறை மந்திரி பைரதி பசவராஜ், கலால்துறை மந்திரி கோபாலய்யா, பெங்களூரு மாநகராட்சி நிர்வாக அதிகாரி ராகேஷ்சிங், தலைமை கமிஷனர் கவுரவ்குப்தா உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்