திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 6 ஆயிரம் கொரோனா தடுப்பூசி மருந்து வந்தது

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 6 ஆயிரம் கொரோனா தடுப்பூசி மருந்துகள் வந்தது.

Update: 2021-06-04 13:04 GMT
திருப்பத்தூர்

முகாம்கள் ரத்து

திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துவருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாவட்டம் முழுவதும் தினமும் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் மண்டபங்கள் என பல்வேறு இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு 18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

 இதனால் திருப்பத்தூர் மாவட்டத்தில் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி முதல் தடுப்பூசி முகாம்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. 3-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை தடுப்பூசி முகாம் நடக்காது என்று அறிவிக்கப்பட்டது.


இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் கூறியதாவது:-

6 ஆயிரம் தடுப்பூசிகள் வந்தது

திருப்பத்தூர் மாவட்டத்தில் தினமும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட 50 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதன் மூலம் 1 லட்சம் பேருக்கு முதல்கட்ட தடுப்பூசியும், 30 ஆயிரம் பேருக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசியும் போடப்பட்டது. 

தற்போது திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 5 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசியும், ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசி மருந்தும் வந்துள்ளது. இதனால் நிறுத்தப்பட்ட தடுப்பூசி முகாம் விரைவில் தொடங்கப்படும். 
இவ்வாறு அவர் தெரிவித்தார். மாவட்ட சுகாதார துணை இயக்குனர் செந்தில் உடனிருந்தார்.

மேலும் செய்திகள்