ஸ்ரீபெரும்புதூர் அருகே டாஸ்மாக் கடை சுவரில் துளை போட்டு கொள்ளை முயற்சி - 3 பேர் கைது

ஸ்ரீபெரும்புதூர் அருகே டாஸ்மாக் கடை சுவரில் துளை போட்டு கொள்ளை முயற்சி நடந்தது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-06-04 05:30 GMT
ஸ்ரீபெரும்புதூர், 

கொரோனா தொற்றை தடுக்க தமிழக அரசு பேல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. மதுகடைகள் தொடர்ந்து மூடிகிடப்பதால் மது பிரியர்கள் மது கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லாரை கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. ஊரடங்கு காரணமாக பல நாட்களாக இந்த டாஸ்மாக் கடை மூடியே கிட்கிறது.

நேற்று முன்தினம் இரவு டாஸ்மாக் கடையில் இருந்து சத்தம் வந்தது. அருகே பணியில் இருந்த காவலாளி பன்னீர்செல்வம் அங்கு சென்று பார்த்தபோது 3 பேர் தப்பி ஓடினர். மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையின் பக்கவாட்டு சுவரில் துளை போட்டிருப்பது தெரியவந்தது. உடனே காவலாளி பன்னீர்செல்வம் டாஸ்மாக் கடை மேலாளருக்கு தகவல் தெரிவித்தார்.

மேலாளர், ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். அங்கு டாஸ்மாக் கடை அருகே கொள்ளையர்கள் விட்டுச்சென்ற மோட்டார் சைக்கிள் இருந்தது. மோட்டார் சைக்கிளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் வல்லாரை கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்த மகேந்திரகுமார் (வயது 35), பன்னீர் (31), மகேந்தர் சிங் (30), ஆகியோர் டாஸ்மாக் கடையின் சுவரில் துளை போட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். கொள்ளை முயற்சி சம்பவம் நடந்த 2 மணி நேரத்தில் போலீசார் விரைந்து செயல்பட்டு கொள்ளையர்களை கைது செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்