வேலை இழப்பு, வருவாய் பாதிப்பு: ஊரடங்கு முடிவுக்கு வருமா?; பொதுமக்கள் எதிர்பார்ப்பு
வேலை இழப்பு, வருவாய் பாதிப்பு என்று ஊரடங்கால் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் நடுத்தர வர்க்கத்தினர் ஊரடங்கு முடிவுக்கு வருமா என்று எதிர்பார்த்து உள்ளனர்.
ஈரோடு
வேலை இழப்பு, வருவாய் பாதிப்பு என்று ஊரடங்கால் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் நடுத்தர வர்க்கத்தினர் ஊரடங்கு முடிவுக்கு வருமா என்று எதிர்பார்த்து உள்ளனர்.
வேலை இழப்பு
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை தொழில் நகரமாக இது விளங்குகிறது. விவசாயம் முக்கிய தொழிலாகவும், ஜவளி பெரிய உற்பத்தி தொழிலாகவும் உள்ளது. இந்த தொழில்களை நம்பி பல்வேறு உப தொழில்களும் உள்ளன. ஒட்டு மொத்தமாக இந்த தொழில்களே வருவாய் அளிக்கும் நிலையில் உள்ளன. ஆனால் ஊரடங்கு காரணமாக மஞ்சள் உள்ளிட்ட பணப்பயிர்கள் விற்பனை செய்ய முடியாமல் தேங்கிக்கிடக்கின்றன. தறிகள் ஓடவில்லை. உற்பத்தி செய்த துணிகள் தேங்கிக்கிடக்கின்றன. இந்த தொழில்களை நம்பி இருந்த தொழிலாளர்கள் அனைவரும் வேலை இன்றி கிடக்கின்றனர்.
தமிழக அரசு அறிவித்த கொரோனா ஊக்கத்தொகை ரேஷன் கார்டுகள் இருந்த குடும்பங்களுக்கு உதவியாக இருந்தது. ஆனால் இன்னும் ரேஷன் கார்டுகள் கூட இல்லாத குடும்பங்களின் நிலை பரிதாபமானது. இவர்கள் நம்பி இருப்பது வேலையைத்தான். வேலை செய்தால் மட்டுமே ஊதியம் என்பதால் வேலை இல்லாத இந்த காலக்கட்டத்தில் எந்த வருவாயும் கிடையாது. அதுமட்டுமின்றி, வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் கூட இந்த நேரத்தில் கொடுத்தால் திரும்ப வாங்குவது கஷ்டம் என்று கடன் கூட கொடுக்க மறுக்கிறார்கள். பெரும்பாலும் தொழிலாளிகள் இந்த கடன்கள் மூலமாகவே குடும்பத்தை நடத்தி வந்தார்கள். மொத்தமாக கடன் வாங்கி குடும்ப செலவை சாமாளித்து விட்டு, தினசரி கிடைக்கும் கூலியை கடனை திரும்ப செலுத்தவும், தங்கள் இதர செலவுக்காகவும் பயன்படுத்தினார்கள்.
ஊரடங்கு முடிவுக்கு வருமா?
கடைகள், ஷோரூம்களில் வேலைகள் செய்து வந்தவர்களுக்கு எந்த வருவாயும் இல்லை. எனவே ஊரடங்கு முடிவுக்கு வருமா? என்பது அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதே நேரம் ஊரடங்கு தளர்த்தப்பட்டால் கொரோனா தாக்கம் அதிகரிக்கும் என்ற அச்சமும் உள்ளது. ஊரடங்கும் தளர்த்தப்பட வேண்டும். கொரோனா பரவலும் தடுக்கப்பட வேண்டும் என்றால் அரசு திட்டமிட்டு செயல்பட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.