திருச்சியில் ஊரடங்கு வேளையில் ஒரு முட்டை ரூ6-க்கு விற்பனை; நாட்டுக்கோழி முட்டை ரூ.25 ஆனது

திருச்சியில் ஊரடங்கு வேளையில் ஒரு முட்டை ரூ.6 என விலை நிர்ணயம் செய்து விற்கப்படுகிறது. அதே வேளையில் நாட்டுக்கோழி முட்டை ரூ.25 வரையிலும் விற்கப்படுகிறது.

Update: 2021-06-03 18:38 GMT

திருச்சி, 
திருச்சியில் ஊரடங்கு வேளையில் ஒரு முட்டை ரூ.6 என விலை நிர்ணயம் செய்து விற்கப்படுகிறது. அதே வேளையில் நாட்டுக்கோழி முட்டை ரூ.25 வரையிலும் விற்கப்படுகிறது.

கடைகள் அடைப்பு

தமிழகத்தில் தற்போது முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால், மளிகைக்கடை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்கக்கூடிய அனைத்தும் அடைக்கப்பட்டு விட்டன.

எனவே, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் தள்ளு வண்டியிலும், மினி சரக்கு வேன்களிலும் வீதி வீதியாக விற்கப்படுகிறது. அவை, நாம் மார்க்கெட்டிற்கு சென்று வாங்கும் விலையை விட இருமடங்கு விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. 

முட்டை

ஊரடங்கால், காய்கறி விற்பனையாளர்கள் நிர்யணம் செய்வதுதான் விலை என்றாகி விட்டது. எனவே, காய்கறி சாப்பிட்ட பலர், உணவுக்கு கூட்டாகவோ அல்லது பொறியலாகவும் முட்டையை சேர்க்க தொடங்கி விட்டனர்.
கோழி, ஆட்டு இறைச்சி மற்றும் மீன் விற்பனை கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கள்ளத்தனமாக இறைச்சி விற்கப்பட்டாலும் அதிகமாக முட்டையையே தற்போது பொதுமக்கள் விரும்பி சாப்பிட்டு வருகிறார்கள்.
முட்டையில் பிராய்லர் கோழி முட்டை, நாட்டுக்கோழி முட்டை என இருவகை உள்ளது. தற்போது கொரோனா நோய்கால உணவாக அநேக வீடுகளில் ரசம் மற்றும் முட்டை சாப்பாட்டுடன் பரிமாறப்பட்டு வருகிறது.

ரூ.6-க்கு விற்பனை

ஆம்லெட், பொரியல், முட்டை குருமா, முட்டை குழம்பு, ஆப் ஆயில் என சமைத்து சாப்பிட்டு வருகிறார்கள். நோய் பாதிப்பில் இருப்பவர்கள் உடல் நலம் தேறவும், உடல் பலம் பெறவும் மருத்துவ உணவாகவே முட்டை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது முட்டை விற்பனை அதிக அளவில் இருப்பதால், பிராய்லர் கோழி மூட்டை விலையை உயர்த்தி விட்டனர். ரூ.4.50, ரூ.5 என விற்கப்பட்ட ஒரு முட்டை தற்போது மளிகை பொரூட்கள் விற்பனை செய்யும் தள்ளு வண்டிகளில் ரூ.6-க்கு விற்கிறார்கள்.

அதே வேளையில் நாட்டுக்கோழி முட்டை விலையும் எகிறி விட்டது. ரூ.10, ரூ.15 என விற்கப்பட்ட ஒரு முட்டை தற்போது ரூ.20 முதல் ரூ.25 வரை கண்டு கண்டு விற்கப்படுகிறது. நாட்டுக்கோழி முட்டையில் குறைவான கலோரி இருப்பதாக கூறப்பட்டாலும், தொடர்ந்து அதை சாப்பிடுவதால் நினைவாற்றல் அதிகரிக்க பெரிதும் காரணமாக அது இருக்கிறது.

மேலும் செய்திகள்