கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கும் பணி தொடக்கம்

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கும் பணியை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.

Update: 2021-06-03 18:35 GMT
கரூர்
மின்சாரம் வழங்கும் பணி
கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று மின்சாரத்துறையின் சார்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் மதிப்பில் 24 மணிநேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கும் பணி தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை தாங்கினார். 
இதில், மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கலந்து கொண்டு, எஸ்.வெள்ளாளப்பட்டியில் உள்ள துணை மின் நிலையத்தில் மின்இணைப்பு கருவிகளை இயக்கி கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். 
அமைச்சர் பேட்டி
அதனைத்தொடர்ந்து கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முகப்பில் அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றியின் சேவையினையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மின்சாரத்துறையின் மூலம் எஸ்.வெள்ளாளப்பட்டி  துணை மின் நிலையத்தில் இருந்து கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 3.2 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய உயர் அழுத்த மின்பாதை ரூ.1 கோடியே 5 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு, மின்சாரம் வழங்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
சிறப்பு கவனம்
ஏற்கனவே, பாலம்மாள்புரம் துணை மின் நிலையத்தில் இருந்துதான் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உயர் மின் அழுத்த மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. இதே மின் பாதையில் தொழிற்சாலைகளுக்கும், வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டு இருந்தது. தற்போது பிரத்தியேகமாக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கென தனியான மின் பாதை அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
மற்ற இடங்களில தவிர்க்க இயலாத காரணங்களால் மின்தடை ஏற்பட்டாலும், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மின்தடை ஏற்படாத வகையில் சிறப்பு கவனம் செலுத்தி இந்த புதிய உயர்அழுத்த மின்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்