ஜன்னல் கம்பியில் தூக்கு மாட்டிய நிலையில் பூட்டிய அறையில் பிணமாக கிடந்த பெண் போலீஸ்
கோவையில் ஜன்னல் கம்பியில் தூக்கு மாட்டிய நிலையில் பூட்டிய அறைக்குள் பெண் போலீஸ் பிணமாக கிடந்தார். எனவே அவருடைய சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.
கோவை
கோவையில் ஜன்னல் கம்பியில் தூக்கு மாட்டிய நிலையில் பூட்டிய அறைக்குள் பெண் போலீஸ் பிணமாக கிடந்தார். எனவே அவருடைய சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.
இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஆயுதப்படை பெண் போலீஸ்
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள கஞ்சம்பமடியை சேர்ந்தவர் ராம்அழகு (வயது 55). இவருடைய மகள் மகாலட்சுமி (25), இன்னும் திருமணமாகவில்லை.
இவர் கடந்த 2018-ம் ஆண்டு முதல் கோவை மாவட்ட ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணியாற்றி வந்தார். இதற்காக அவர் கோவை உப்பிலிபாளையத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பில் தங்கி இருந்து வந்தார்.
மகாலட்சுமிக்கும், அவருடன் பணியாற்றி வரும் நெல்லையை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது.
பின்னர் அது காதலாக மாறியது. இதனால் ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர்.
பிணமாக கிடந்தார்
இந்த நிலையில் மகாலட்சுமியின் செல்போனுக்கு அவருடைய காதலர் தொடர்பு கொண்டார். ஆனால் பல முறை தொடர்பு கொண்டும் செல்போனை எடுத்து பேசவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த அவர் மகாலட்சுமி தங்கி இருந்த குடியிருப்புக்கு சென்று பார்த்தார். அப்போது அந்த வீட்டின் படுக்கை அறையில் உள்ள ஜன்னல் கம்பியில் கழுத்தில் கயிறு கட்டி தூக்கு மாட்டிய நிலையில் பிணமாக கிடந்தார்.
அவருடைய உடல் முட்டிப்போட்ட நிலையில் தரையில் இருந்தது. உடனே அவர் இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மகாலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே மகாலட்சுமியின் சாவில் மர்மம் இருப்பதாக அவருடைய உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது:-
சாவில் மர்மம்
மகாலட்சுமிக்கு நாங்கள் மாப்பிள்ளை பார்த்து வந்தோம். அப்போது அவர் தன்னுடன் பணியாற்றும் சக போலீஸ்காரர் ஒருவரை காதலிப்பதாக தெரிவித்தார். அவர்கள் காதலை ஏற்றுக்கொண்டோம்.
ஆனால் காதலரின் வீட்டில் தான் சம்மதம் தெரிவிக்கவில்லை. மேலும் மகாலட்சுமி மிகவும் தைரியமானவர். அவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை.
திடீரென மகாலட்சுமி இறந்து இறப்பது சந்தேகத்தை எழுப்புகிறது. அதுபோன்று அவர் இறந்து கிடந்த விதத்தை பார்க்கும்போது அவர் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு இல்லை.
யாரோ கொலை செய்துவிட்டு ஜன்னல் கம்பியில் தூக்குப்போட்டவாறு செய்து இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. ஆனால் போலீசார் தற்கொலை செய்து உள்ளார் என்று கூறுகிறார்கள்.
எனவே இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
தீவிர விசாரணை
இதுகுறித்து போலீசார் கூறும்போது, ஜன்னல் கம்பியில் கயிறு மாட்டி தரையில் அமர்ந்து இருந்தவாறு மகாலட்சுமி பிணமாக கிடந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அத்துடன் அவர் அறையில் இருந்த செல்போன் மற்றும் டைரியை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறோம், என்றனர்.
பெண் போலீஸ் ஒருவர் பூட்டிய அறையில் பிணமாக கிடந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.