கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 2 ஆயிரத்து 350 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் 3 பேர் கைது
கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 2 ஆயிரத்து 350 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி:
கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 2 ஆயிரத்து 350 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கண்காணிப்பு
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில் போலீசார், சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படுகிறதா என்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தில் இருந்து மதுபானங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்து உள்ளது. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி தலைமையிடத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மேற்பார்வையில், தூத்துக்குடி மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி தலைமையில், இன்ஸ்பெக்டர் ரோஸ்லின் சேவியோ, சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் குரும்பூர் மெயின்ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
மதுபானம்
அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி மற்றும் காரை வழிமறித்து சோதனை செய்தனர். அந்த லாரியில் மாட்டு தீவனங்களுக்கு இடையே மறைத்து வைத்து 49 அட்டைப் பெட்டிகளில் 180 மில்லி அளவு கொண்ட 480 மதுபாட்டில்கள், அதே அளவு கொண்ட 1872 மதுபான பாக்கெட்டுகள் ஆக மொத்தம் 2 ஆயிரத்து 352 மதுபானங்கள் இருந்தன. மேலும் ரூ.14 லட்சத்து 51 ஆயிரத்து 850 ரொக்கப்பணமும் வைத்து இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து கார் மற்றும் லாரியில் இருந்த அருப்புக்கோட்டையை சேர்ந்த மகாதேவன் மகன் சிவராமன் (வயது 40), திருப்பூர் படியூரைச் சேர்ந்த மணி மகன் மெய்யழகன் (38) மற்றும் திருப்பூர் மன்னரை பாளையக்காடு பகுதியைச் சேர்ந்த மொக்கராசு மகன் பூபாலன் (35) ஆகியோரை பிடித்து விசாரணை செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்ட 3 பேரும், கர்நாடக மாநிலம் பெங்களூரில் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி அவற்றை
தமிழ்நாட்டில் கும்பகோணம், புதுக்கோட்டை மாவட்டம், மதுரை மேலூர் மற்றும் நாங்குநேரி உள்ளிட்ட இடங்களில் சட்டவிரோதமாக விற்பனை செய்து உள்ளனர். அந்த பணத்துடன் தூத்துக்குடி மாவட்டத்தில் விற்பனை செய்வதற்காக நாங்குநேரியில் இருந்து வந்து உள்ளனர். அப்போது போலீசில் சிக்கி கொண்டது தெரியவந்து உள்ளது.
கைது
இது குறித்து தூத்துக்குடி மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து சிவராமன், மெய்யழகன், பூபாலன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 2 ஆயிரத்து 352 மதுபானங்கள், ரூ.14 லட்சத்து 51 ஆயிரத்து 850, லாரி மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து மதுவிலக்கு போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பாராட்டினார்.