பூதலூர், நாஞ்சிக்கோட்டை, திருவையாறு பகுதிகளில் 132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
பூதலூர், நாஞ்சிக்கோட்டை, திருவையாறு பகுதிகளில் நேற்று 132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
திருக்காட்டுப்பள்ளி,
திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூதலூர் தாலுகா பகுதியில் நேற்று ஒரே நாளில் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதிகபட்சமாக பூதலூர் நகரில் மட்டும் 12 பேருக்கு கொரோனா உறுதியானது. தொற்று உறுதிசெய்யப்பட்ட கிராம பகுதிகளில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பூதலூர் அருகே உள்ள பவனமங்கலம், வளம்பகுடி, மனையேரிப்பட்டி ஆகிய கிராமங்களில் கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது.
முகாமில் டாக்டர்கள் நவீன் குமார், பானுப்பிரியா, ஆய்வக டெக்னீசியன்கள் ரஜினி, ஆனந்தி ஆகியோர் கலந்துகொண்டு பரிசோதனைகளை மேற்கொண்டனர். பவன மங்கலத்தில் 145 பேருக்கும், வளம்பக்குடியில் 174 பேருக்கும், மனையேரிப்பட்டியில் 28 பேருக்கும் என மொத்தம் 347 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் விஜயராஜ், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆனந்தன், சுகாதார ஆய்வாளர்கள் ராமநாதன், தனபால், அன்பரசன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாஞ்சிக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஒரே நாளில் 70 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதில் நாஞ்சிக்கோட்டை வடக்கு தெருவை சேர்ந்த 24 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க ஊராட்சி தலைவர் சத்தியராஜ் நடவடிக்கை மேற்கொண்டார்.
திருவையாறு பகுதியில் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை அறிந்த திருவையாறு தாசில்தார் நெடுஞ்செழியன், ஒன்றிய ஆணையர்கள், கணேசன், நந்தினி, பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா, நடுக்காவேரி அரசு மருத்துவமனை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சதாசிவம், வருவாய் ஆய்வாளர்கள் சாந்தி, சந்துரு, மஞ்சு மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட இடங்களில் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டனர். புனல்வாசல், அந்தளி ஆகிய பகுதிகளில் உள்ள கொரோனா பாதிக்கப்பட்ட தெருக்கள் சுத்தம் செய்யப்பட்டு, தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டது.