மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
புதுக்கோட்டை மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு அலுவலர்களுடன் கலெக்டர் உமாமகேஸ்வரி, முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக நேற்று ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.
கொரோனா தொற்று பாதித்து தனிமைப்படுத்தி சிகிச்சையில் இருந்தாலும் மாவட்ட நிர்வாகத்திற்கு தேவையான தற்போதைய நடவடிக்கைகளை குறித்து அதிகாரிகளுக்கு அவர் எடுத்துரைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசின் அறிவுறுத்தலுக்கிணங்க நோய் தடுப்பு நடடிக்கைகள் புதுக்கோட்டை மாவட்டத்திலும் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகள், கொரோனா தடுப்பூசி முகாம், மாவட்டத்தில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், மருத்துவ முகாம்கள், போன்ற பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுடன் கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது. நோய் தடுப்புப் பணிகளை தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கடந்த கால நிகழ்வுகளை கருத்தில் கொண்டு தென்மேற்கு பருவமழையின் போது புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஊரக வளர்ச்சித் துறையினர் தங்களது பகுதிகளில் உள்ள குளங்கள், ஊரணிகள் போன்ற நீர்நிலைகளில் உடைப்பு இருப்பின் அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும். தேவையான மணல் மூட்டைகள், சாக்கு பைகளை இருப்பு வைக்கவும், பொதுப்பணித் துறையினர் அனைத்து புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் பொது கட்டிடங்களில் ஏற்பட்டுள்ள சிறுபழுதுகளை சரிசெய்து பொதுமக்களை தங்க வைக்கும் வகையில் தயார்நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீன்வளத்துறையினர் வானிலை ஆராய்ச்சி மையத்தின் வானிலை தொடர்பான முன்னெச்சரிக்கையினை மீனவர்களுக்கு தெரிவித்து தகுந்த முன்னேற்பாடு பணிகள் செய்ய வேண்டும்.
மின்சாரத்துறையினர் பேரிடர்களால் பாதிக்கப்படும் மின்கம்பங்களை உடனுக்குடன் சரிசெய்து தடையற்ற மின்சாரம் வழங்கும் வகையில் தேவையான மின்கம்பங்களை தயார்நிலையில் வைத்திருக்கவும், தீயணைப்புத் துறையினர் தேவையான மீட்பு உபகரணங்களுடன் தயார்நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. செய்தித்துறையினர் மழைவெள்ளக் காலங்களில் பெறப்படும் வானிலை அறிவிப்பு குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் உடனுக்குடன் செய்தித்தாள்களில் பிரசுரம் செய்யவும், சுகாதாரத் துறையினர் போதுமான அளவு மருந்து மாத்திரைகளை கையிருப்பில் வைத்திருப்பதுடன் தேவையான மருத்துவக் குழுக்கள் அமைத்து தயார்நிலையில் இருக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டன.
தாசில்தார் தினமும் காலை 7 மணிக்குள் தங்களது வட்டங்களில் முதல் நாள் பெய்த மழையின் அளவு, குடிசை வீடுகள் சேதம், கால்நடை இழப்பு, மனித உயிர்கள் இழப்பு, பயிர்கள் சேதம் மற்றும் பேரிடர் குறித்த இதர தகவல்களையும் தவறாமல் கலெக்டர் அலுவலகத்தின் பேரிடர் மேலாண்மை பிரிவில் இயங்கும் 1077 மற்றும் 04322-222207 என்ற அவசர கட்டுப்பாட்டு மைய தொலைபேசியில் தெரிவித்து, பின்னர் அதனை அறிக்கை வடிவில் தனிநபர் மூலம் அனுப்பிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சந்தோஷ்குமார், அறந்தாங்கி சப்-கலெக்டர் ஆனந்த் மோகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.