பொதுமக்கள் அன்றாட உணவில் மூலிகைகளை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்
கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக பொதுமக்கள் அன்றாட உணவில் மூலிகைகளை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
தளி
கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக பொதுமக்கள் அன்றாட உணவில் மூலிகைகளை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
நலம் தரும் மூலிகை
எந்த ஒரு உயிரினமும் நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்கு நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்ச பூதங்களின் தயவும் மூலிகைகளின் உதவியும் அவசியமாகும்.மனித உடல் கட்டமைப்பு மட்டுமின்றி புல், புழு வரையிலும் பஞ்சபூதங்களை சார்ந்தும் மூலிகைகளின் துணை கொண்டுதான் வாழமுடியும். ஒவ்வொரு உயிரினத்தின் ஆரோக்கியம் காப்பதற்காக இயற்கை மருத்துவ குணம் கொண்ட எண்ணற்ற மூலிகைகளை நமக்கு அருகாமையிலேயே கண்ணுக்கும் கைக்கும் எட்டும் தூரத்தில் படைத்துள்ளது.
அவை சாலையின் ஓரங்களிலும், நீர்நிலைகள், வயல்வெளிகளின் வேலிகள், எதற்கும் பயன் இல்லாத தரிசு நிலங்களில் தாமாகவே வளர்ந்து வருகிறது.நமக்கு தெரிந்த வகையில் தூதுவளை, முசுமுசுக்கை, முடக்கத்தான், அம்மான்பச்சரிசி, முக்கிரட்டை, கீழாநெல்லி, கரிசாலை, பிரண்டை, சோற்றுக்கற்றாழை, நித்தியகல்யாணி, சிறியாநங்கை, பெரியாநங்கை, துளசி, ஆவாரை, கறிவேப்பிலை, முருங்கை, அகத்தி, அருகம்புல், குப்பைமேனி, தும்பை, நொச்சி, மஞ்சள், வெற்றிலை உள்ளிட்டவற்றை கூறலாம். இன்றைய இளம் தலைமுறைக்கு மூலிகைகளின் பெயரும் தெரியாது, மகத்துவமும் புரியாது. மூலிகைகளுக்கு அதற்குரிய நாளில் காப்புகட்டி பூஜை செய்து பறித்து வந்து சரியான அளவில் எடுத்து பக்குவப்படுத்தி சூரணமாகவும், கசாயமாகவும், லேகியமாகவும் பயன்படுத்தினால் நமது உடல் நோய் நொடியில்லாமல் ஆரோக்கியமாக திகழும்.
மகத்துவம் உணரவில்லை
ஆனால் இன்றைய அவசர உலகில் பாரம்பரிய உணவுகளை தவிர்த்து துரித வகை உணவுகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கூடவே தவறான பழக்கவழக்கங்கள் கட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை முறை. உடல் நினைப்பதை கொடுக்காமல் மனம், நாவு நினைப்பதை கொடுக்கும் காலமே தற்போது உள்ளது. இதனால் உடலுக்கு கிடைக்க வேண்டிய இனிப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு, கரிப்பு, காரம் உள்ளிட்ட அறுசுவைகள் முழுமையாக கிடைப்பதில்லை. உணவில் சிறு தானியங்கள், கீரைகள், பாரம்பரிய அரிசி வகைகள் பயன்பாடு இல்லை. போதை வஸ்துக்கள் அன்றாடம் அசைவ உணவு பயன்பாடு அதிகரித்துள்ளது.
நம்முடைய தவறான பழக்கவழக்கங்கள் கட்டுப்பாடுகள் இல்லாத உணவு முறை காரணமாக உடல் உள் உறுப்புகள் நிலைகுலைந்து செயலற்றதாகி நிற்கிறது.இதனால் நோய்கள் உடலை எளிதில் தொற்றிக் கொள்வதால் அடிக்கடி ஆஸ்பத்திரியை நாடவேண்டி உள்ளது. மாதம் ஒருமுறை அல்லது இருமுறை வாரத்தில் ஏதாவது ஒருநாளில் முன்னோர்களால் கடைபிடிக்கப்பட்டு வந்த உண்ணா நோன்பு என்னும் உடல் உறுப்புகளை பலப்படுத்தும் கலை மறைந்தே விட்டது.நாள் முழுவதும் உணவு இல்லாமல் தண்ணீரை கொடுத்துக் கொண்டிருப்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் சிறுநீராக வெளியேறி கண்ணுக்கு தெரியாத வியாதிகளை தானாகவே அழித்துவிடும் உறுப்புகளும் புத்துணர்வு பெறும்.இதை உணர்பவர் யாரும் இல்லை.
கொரோனா வருகை
இந்த சூழலில்தான் கொரோனா என்ற உயிர்க்கொல்லி பெருந்தொற்று உலகம் முழுவதும் காட்டுத்தீயாக பரவி அனைவரையும் தாக்கி வருகிறது. ஏராளமானோர் இறந்து வருகின்றனர். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை அது எளிதில் பலி வாங்கி வருவதாக கூறப்படுகிறது.
செயற்கை வழியில் செயற்கை முறையில் விளைந்த உணவுகளை உட்கொண்டு உடலை கவனிக்காமல் வாழ்ந்து வந்த மனிதர்களை உயிர் பயம் தொற்றிக் கொண்டுள்ளது. கொரோனா என்ற அரக்கனை வெல்வதற்கு இயற்கையோடு சேர்ந்து வாழும் எண்ணத்திற்கு வந்து விட்டனர்.
மூலிகை பயன்பாடு
அன்றாட உணவில் இடம் பிடித்திருந்த பீட்சா, பர்கர், நூடுல்ஸ் போன்ற துரித வகை உணவுகள் பயன்பாடு குறைந்து தூதுவளை ரசம், முருங்கைக்கீரைசூப், ஏதாவது ஒரு கீரை பொரியல், மஞ்சள் மிளகு பால், எள் மற்றும் கடலைஎண்ணெய், பல் துலக்குவதற்கு ஆயுர்வேதபேஸ்ட், நொச்சி இலையில் ஆவி பிடித்தல், வீட்டை சுற்றிலும் சாணம் போட்டு மொழுகுவது, வீட்டின் நிலவில் மாவிலை வேப்பிலை தோரணம் கட்டுவது, முடக்கத்தான் முசுமுசுக்கை தோசை, மிளகு பூண்டு ரசம், வெஜிடபிள்சூப், மூலிகைதேநீர், கபசுரகுடிநீர் என மூலிகைகளை சுற்றியே அன்றாட வாழ்க்கை சுழன்று கொண்டுள்ளது.
நாட்டு மருந்து கடைகளில் கால்கடுக்க நின்று மூலிகைகளை வாங்கி சென்ற வண்ணம் உள்ளனர்.பொதுமக்கள் அனைவரும் ஒருசேர நாள்தோறும் மூலிகை செடிகளைத் தேடி செல்வதால் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.வயல்வெளிகளின் வேலிகளில் உள்ள மூலிகைசெடிகளில் தண்டு மட்டுமே உள்ளது தளைகள் இல்லை.உதாரணமாக முருங்கை மரத்தை கூறலாம்.அதன் தளை, பூ, பிஞ்சு, காய் என அனைத்தையும் பறித்து விட்டனர்.இதனால் மரமே ஒரு சில பகுதிகளில் வெறுமையாக காட்சி அளிக்கிறது. அதைத்தொடர்ந்து மூலிகைகளை வீடுகளில் நடவு செய்து பயன்படுத்தும் நிலைக்கு வந்து விட்டனர். இயற்கை அதன் மகத்துவத்தை மனிதனுக்கு தெளிவாகவும், உணர்வுப்பூர்வமாகவும், ஆணித்தரமாகவும் உணர்த்திவிட்டது. தற்போதைய இயற்கை சார்ந்த நடைமுறைகளை தொடர்ந்து கடைபிடித்து அனைவரும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு முயற்சிக்க வேண்டும்.அத்துடன் இளம் தலைமுறையினருக்கு இயற்கையோடு இணைந்து வாழ்வதற்கும் கற்றுத்தர வேண்டும்